
காமெடி நடிகர் ராஜ்குமார் திருமணம் : முதல்வர் நடத்தி வைத்தார்
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நவீன சரஸ்வதி சபதம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஜிகர்தண்டா, சீதக்காதி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் ராஜ்குமார். 'டிரிபிள்ஸ்' என்ற வெப் தொடரிலும் நடித்தார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மெய்காப்பாளர் திருமங்கலம் கோபாலின் மகன்.
ராஜ்குமார், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷகிலா பானு தம்பதியரின் மகளான சஜுவை பல வருடங்களாக காதலித்து வந்தார். காதலுக்கு இரு குடும்பமும் பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து இவர்கள் திருமணம் நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர் பாபு, திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி, பாலாஜி தரணிதரன், டெல்லி பிரசாத் தீனதயாள், நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், நடிகை காயத்ரி, இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்த், இயக்குநர் அமிர்தராஜ் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.