அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2004 முதல் 2009 வரை ஆந்திர முதல்வராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் ஜெகன்மோகன் தனது வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி சொத்துகளை சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜெகன்மோகனை சிபிஐ கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் கைது செய்தது. 15 மாதங்களுக்கு பிறகு ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் இருந்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெகன் ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த 2019-ல், ஜெகன் ஆந்திர முதல்வராக பதவியேற்ற பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.பி. ரகுராம கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எம்.பி. ரகுராம கிருஷ்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்று, தற்போது ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் பதவி வகித்து வருகிறார். முதல்வர் என்பதால் அவர் சாட்சிகளை மிரட்டி, அவரது வழக்கில் சாட்சிகளே இல்லாமல் செய்து விடுவார். ஆதலால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். மேலும் விசாரணையில் இருந்து ஒவ்வொரு முறையும் விலக்கு அளிக்க முறையான காரணம் இருக்க வேண்டும்” என்றார்.
ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும்மனுதாரர் தனி மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த மனுக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது. மேலும், இந்த வழக்கை வரும் ஜனவரி, முதல் வாரத்தில் விசாரிப்பதாக தெரிவித்தது.