திருநெல்வேலி: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக திருநெல்வேலியில் மகளிர் காங்கிரஸார் கருப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அழகிரி பங்கேற்கும் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்புரோஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு திசையன்விளையில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். இந்நிலையில் இந்த மாநாட்டில் நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து திருநெல்வேலியிலுள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகளிர் காங்கிரஸார் கருப்பு உடையணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கமிட்டி தலைமை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரை புறக்கணிப்பதாகவும் பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி பதவிகள் வழங்கப்படவில்லை என்ற கோரிக்கை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து நெல்லை மாவட்ட தலைமை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமை வகித்தார். “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செயல்பட்டு வருகிறார். அவரை மாற்ற வேண்டும். இதுபோல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரையும் மாற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இச்சூழ்நிலையில் அழகிரி பங்கேற்கும் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தனது வாட்ஸ்அப் குரூப்பில் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் என்பவர் கருத்து பதிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மூன்றடைப்பு போலீஸில் இந்த வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி அம்புரோஸை கைது செய்தனர். இச்சம்பவங்களால் திருநெல்வேலி காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.