சிக்கமகளூரு, : யானை தாக்கி இறந்த வன ஊழியர் குடும்பத்திற்கு வனத்துறை அதிகாரிகள் 25 லட்சம் ரூபாய்க்கான, காசோலையை நிவாரணமாக வழங்கி உள்ளனர்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா கவுடஹள்ளியை சேர்ந்தவர் கார்த்திக் கவுடா, 26. மூடிகெரேயில் யானை அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையால் அமைக்கப்பட்ட, யானை விரட்டும் குழுவில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார்.
கடந்த 22ம் தேதி மாலையில், பீராபுரா என்ற கிராமத்தில், யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது. யானை விரட்டும் குழுவினர் சென்றனர்.
அப்போது ஒரு யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து, வன ஊழியர்களை விரட்டியது. யானையிடம் இருந்து தப்பிக்க ஓடியபோது, கார்த்திக் கவுடா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை தும்பிக்கையால் யானை தாக்கியது. படுகாயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நேற்று கார்த்திக் கவுடா வீட்டிற்குச் சென்ற, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் 25 லட்சம் ரூபாய்க்கான, காசோலை நிவாரணமாக வழங்கினர்.
யானை தாக்கி உயிரிழந்தால் 15 லட்சம் ரூபாய் தான் நிவாரணம் வழங்கப்படும். ஆனால் கார்த்திக் கவுடா வனத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றியதால், அவரது குடும்பத்திற்கு கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக, வனத்துறை கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement