பெலகாவி,: கோவாவில் இருந்து, கர்நாடகாவுக்கு கடத்தி வந்த மது பாட்டில்களை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெலகாவி மாவட்ட கலால்துறை அதிகாரிகள், நேற்று மாலை, கனகும்பி சோதனைச் சாவடி அருகில், கோவாவில் இருந்து கர்நாடகாவுக்கு வந்த வாகனங்களை சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த கன்டெய்னரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். கன்டெய்னருக்குள், ரகசிய கன்டெய்னர் அமைத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதற்குள் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள், 15 லட்சம் மதிப்புள்ள வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மது பாட்டில்கள், கோவாவில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. மது பாட்டில்கள் கடத்துவதற்கு வசதியாக, கன்டெய்னர் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. இதை கடத்திய பீஹாரை சேர்ந்த சுபோத், 35, என்பவரை கைது செய்தனர்.
கலால் துறை கமிஷனர் மஞ்சுநாத் கூறியதாவது:
மது கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெவ்வேறு வகையான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நபர், கலப்படமான பொருட்களை பயன்படுத்தி, சட்டவிரோதமாக மது தயாரித்த கும்பலில் தொடர்பு கொண்டுள்ளார்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுவின் தரத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். பெலகாவி சுவர்ணா சவுதாவில், டிசம்பர் 4 முதல் 10 நாட்கள், சட்டசபை குளிர்க்கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே, பெலகாவியில் கோவா மதுவை பதுக்கிவைக்க முயற்சித்துள்ளனர். இதை பேக்கிங் செய்து, விற்பனை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement