பெங்களூரு, : ”போக்குவரத்துக்கழகங்களில், காலியாக உள்ள 9,000 பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்,” என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரு விதான்சவுதாவில் நேற்று அவர் கூறியதாவது:
கடந்த ஏழு ஆண்டுகளாக, போக்குவரத்துக்கழகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பவில்லை. இந்த காலகட்டத்தில், 13,000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது காலியாக உள்ள 9,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.
பெண்களுக்காக செயல்படுத்தப்பட்ட ‘சக்தி’ திட்டம், அமோக வெற்றி பெற்றுள்ளது. நான்கு போக்குவரத்துக்கழகங்களிலும், 5,500 புதிய பஸ்கள் சேர்க்கப்படும். சட்டசபை தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளில், ‘சக்தி’யும் ஒன்றாகும். ஆட்சிக்கு வந்த 15 நாட்களில், திட்டத்தை செயல்படுத்தினேன். நாட்டிலேயே இது பெரிய திட்டமாகும்.
தமிழகம் மற்றும் புதுடில்லியில், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி உள்ளது. மஹாராஷ்டிராவில் 50 சதவீதம் சலுகை உள்ளது. ஆனால் கர்நாடகாவில் மட்டும், மாநிலம் முழுதும் பெண்கள் இலவச பயணத்துக்கு வாய்ப்புள்ளது. பள்ளி மாணவியர், சுற்றுலா தலங்கள், யாத்திரை தலங்களுக்கு செல்கின்றனர்.
கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் ஒரு கோடி ரூபாய் வரையும், மற்ற போக்குவரத்துக்கழகங்களில் 50 லட்சம் ரூபாய் வரையும் காப்பீடு வசதி உள்ளது. இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. 15 ஆண்டு விபத்து இல்லாமல், வாகனம் ஓட்டிய ஓட்டுனர்களுக்கு, முதல்வர் தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளார். நாட்டிலேயே மிக அதிகமான தேசிய, சர்வதேச அளவிலான விருதுகளை கே.எஸ்.ஆர்.டி.சி., பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement