காத்மாண்டு: நம்
அண்டை நாடான நேபாளத்தில் மக்கள் கடந்த சில வாரங்களாக திடீர் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். ‘மீண்டும் மன்னராட்சியை அமல்படுத்த வேண்டும். மீண்டும்
ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பது இவர்களுடைய முக்கிய கோரிக்கை.
நேபாளத்தை சீனா ஆக்கிரமித்து விடுமோ என்ற பயத்தில் மக்கள் போராட்டத்தை
துவக்கியுள்ளதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
நம் அண்டை நாடான நேபாளம், நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. வடக்கே, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் உள்ளது.
மற்ற
மூன்று பக்கத்திலும், நம் நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஒரு சில
இடத்தில், வங்கதேசம் மற்றும் பூடானுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
மன்னராட்சி
இங்கு, 81 சதவீதம் பேர் ஹிந்துக்கள். அதே நேரத்தில், 8 சதவீதம் பேர் புத்த மதத்தினர். இங்கு, மன்னராட்சியே இருந்து வந்தது.
கடந்த, 2006ல் மன்னராட்சிக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து,
மன்னராட்சி முறையை ரத்து செய்து, மக்களாட்சியை அமல்படுத்துவதாக, அப்போது
மன்னராக இருந்த ஞானேந்திரா அறிவித்தார். இதைத் தொடர்ந்து, 2008ல் நேபாளம்,
குடியரசானது. மேலும், ஹிந்து நாடு என்பது, மதச்சார்பற்ற நாடாக
அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது மக்கள் மீண்டும் மன்னராட்சி கேட்டும், ஹிந்து நாடாக அறிவிக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, தலைநகர் காத்மாண்டுவை முற்றுகையிடும் வகையில், போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களாட்சி அறிமுகம்
இது குறித்து நம் புலனாய்வு அமைப்பின் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:
நேபாளத்தில்,
மக்களாட்சி அறிமுகம் செய்யப்பட்டாலும், ஆட்சியில் இருந்தவர்கள்,
சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். சீனா கூறுவதற்கு தலையாட்டி
வந்ததுடன், ஊழலில் ஈடுபட்டனர்.
சீனாவின் ஆதிக்கத்தால், எந்த ஆட்சியும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.
இதனால், மிக விரைவில், நேபாளத்தையும் சீனா கைப்பற்றிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தே,
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், மீண்டும் மன்னராட்சி
கேட்கும், ஹிந்து நாடாக அறிவிக்கக் கோரியும் போராட்டங்கள் நடந்து
வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்