தமிழ் சினிமாவில் முதன் முதலில் தொடங்கிய சங்கம் என்றால் அது இசையமைப்பாளர் சங்கம்தான். தற்போது இந்த சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா இருந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு முறை சங்கத் தலைவராக இருந்து வரும் தினா, மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தினா மீண்டும் போட்டியிடக்கூடாது, சட்டப்படி தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என இளையராஜாவிடம் இசையமைப்பாளர் சபேஷ் முரளி உள்பட பலர் முறையிட்டதுடன், நீதிமன்றத்தையும் நாடினார்கள். இதற்கிடையே தீனா மீண்டும் போட்டியிட வேண்டாம் என இளையராஜாவும் அவரை அறிவுறுத்தி ஆடியோவும் வெளியிட்டார். அந்த ஆடியோவில் இளையராஜா, “திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது. இந்த இசையமைப்பாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தது எம்.பி.சீனிவாசன். இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது. நீ ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்து விட்டாய். மூன்றாவது முறையாகவும் ஏன் போட்டியிடுகிறாய்? அடுத்தத் தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா? இந்த சங்கத்தில் தற்போது முறைகேடுகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், இதைச் சொல்கிறேன். நீ இரண்டு முறை தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறாய். அந்த மனநிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்” என இளையராஜாவின் ஆடியோவில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரர்களில் ஒருவரான சபேஷனிடம் (சபேஷ்) பேசினேன்.
”தினாவை பதவி விலகச் சொல்றதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. எங்க சங்க விதிப்படி, ஒருத்தர் இரண்டு முறைதான் பதவியில இருக்க முடியும். ஆனா, இவர் மூணாவது முறையும் பதவியில இருக்கணும் என்பதற்கான வேலைகள்ல இறங்கியிருக்கார். சங்க பணத்தை நிறைய அடிச்சிருக்கார். உதாரணமா கொரோனா காலகட்டத்தில் ராஜா சார், ரஹ்மான் சார் உள்பட பலரும் ‘இசைக்கலைஞர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் வேலை இருக்காது. அதானால அவங்களுக்கு மாதாமாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்யுங்கன்னு சொல்லி தலைவராக இருந்த தினாகிட்ட பெரிய தொகையை கொடுத்தாங்க. ஆனா, இசைக்கலைஞர்கள் நிறைய பேருக்கு சங்கத்தில் இருந்து அந்த பண்த்தைக் கொடுத்தது மாதிரி கணக்குதான் காண்பிச்சிருக்காங்க. என்னுடைய கையெழுத்தைக் கூட அவங்களே போட்டிருக்காங்க. எனக்கே பணம் கொடுத்ததாகக் கணக்கு காட்டினாங்க. நான் மட்டுமல்ல ரெஹைனா, பவதாரிணி, கலைவாணர் என்.எஸ்.கே.வின் பேத்தி ரம்யானு இவங்களுக்கும் மாசா மாசம் பணம் கொடுத்ததாகவும், கையெழுத்துப் போட்டு வாங்கிட்டதாகவும் கணக்கு காட்டுறாங்க. இந்த வகையில பெரிய தொகையை யாரோ எடுத்திருக்காங்க. ஐந்து வருடங்கள் பதவியில் இருந்திருக்கார். ஆனா, ஒருமுன்னேற்றம் கூட ஏற்படல.

இதைவிட சங்கத்துல அசோஷியட் உறுப்பினர்கள்னு 700 பேரை சேர்த்திருக்கார். அத்தனை பேர்கிட்டேயும் பணம் வாங்கிட்டுத்தான் சேர்த்திருக்கார். இவங்கள்லாம் எங்கே இருந்தவங்க? வாசிக்கிறவங்களா? வாசிக்காதவங்களானு கூட தெரியல. இந்த 700 பேருக்கும் ஓட்டுரிமை கொடுத்தால், அவங்க ஓட்டு வச்சு, மறுபடியும் ஜெயிக்கலாம்னு திட்டமிட்டிருக்கார்.
எங்க அண்ணன் தேவா, இயல் இசை நாடக மன்றத் தலைவராக பொறுப்பு வகித்த போது, தினாவை கூப்பிட்டு, ‘நலிந்த இசைக்கலைஞர்களுக்கு தமிழக அரசு மாதாமாதம் பணஉதவி அளித்து வருகிறது. நலிந்த சங்க உறுப்பினர்கள் 50 பேரோட பெயர்களை ரெடி பண்ணிக் குடுங்க. அவங்களுக்கு அனுமதி வாங்கித் தந்திடுறேன்’னு சொன்னார். ஆனால், நலிந்த கலைஞர்களின் பட்டியலை தேவாவிடம் கொடுக்கவே இல்லை.
இதையெல்லாத்தையும் விட ரொம்பவும் அமைதியா போய்க்கிட்டிருந்த சங்கத்தை இப்போ நீதிமன்றம் வரை கொண்டு வந்துட்டார். ராஜா சார்கிட்டேயும் போய் நாங்க முறையிட்டோம். தினாவைக் கூப்பிட்டுவிட்டு எங்களோடு இளையராஜா சாரும் காத்திருந்தார். ஆனா, ராஜா சார் காத்திருந்த நேரம் வரை அவர் வரல. இதைவிட, இப்ப ராஜா சார் ஆடியோல பேசி அனுப்பியும், இன்னமும் பதவி விலகாமல் இருக்கார். ஏன்னா, பதவி விலகிட்டு வெளியே போனால், மாட்டிக்குவார். இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். மெட்ரோ ட்ரெயினுக்காக சங்க இடத்தைக் கொஞ்சம் எடுத்திருக்காங்க. அதுக்காக மெட்ரோ நிறுவனம் சங்கத்துக்கு பணம் கொடுத்ததாகவும், அதை சங்க அக்கவுன்ட்ல வரவு வைக்காமல் இருக்கறதாகவும் சொந்தமாக ஒரு கணக்குத் தொடங்கி அதில் வரவு வைத்ததாகவும் சொல்றாங்க.” என குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார் சபேஷ்

இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், இந்த பிரச்சினை குறித்து மியூசிக் யூனியனில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால், விவகாரம் நீதிமன்றம் வரை சென்று விட்டதால் காவல்துறையில் இருந்து ‘சங்க வளாகத்தில் இருந்து பிரஸ் மீட் அளிக்க வேண்டாம். வேறு இடத்தில் பிரஸ் மீட்டை வைத்துக் கொள்ளுங்கள்’ என சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் தினாவின் கருத்தை அறிய அவரை தொடர்புகொண்டோம். ஆனால் அவரிடமிருந்து பதிலில்லை. அவரும் பேச விரும்பினால், அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.