வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் 15 வது ஆண்டு நினைவு தினம் இன்று (நவ.26) அனுசரிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் நினைவிடத்தில் மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மஹாராஷ்டிராவில் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகள் 10 பேர், மும்பை நகருக்குள் 2008, நவம்பர் 26ல் கடல் வழியாக நுழைந்தனர். சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் 60 மணி நேரம் சண்டை நடந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர், உதவி எஸ்.ஐ., துக்காராம் ஓம்லே உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.இந்த தாக்குதல் சம்பவத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதற்கு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement