பையப்பனஹள்ளி : இரண்டு ஆண்டுகளில் 950 கருக்கலைப்பு செய்த சென்னை டாக்டர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து, பெற்றோரிடம் கூறி பணம் வசூலித்ததாக, கடந்த மாதம் 25ம் தேதி, பெங்களூரு பையப்பனஹள்ளி போலீசார், வீரேஷ், சிவநஞ்சேகவுடா, நவீன், நயன்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், மைசூரு உதயகிரியைச் சேர்ந்த டாக்டர் சந்தன்பல்லாலின் மருத்துவமனையில், சட்டவிரோத கருக்கலைப்பு நடப்பது பற்றி தெரிய வந்தது.
இதையடுத்து சந்தன்பல்லால், 45, அவரது மனைவி மீனா, 42, லேப் டெக்னிஷியன் நிஷார், 27 வரவேற்பாளர் ரீஸ்மா, 48, சென்னையைச் சேர்ந்த டாக்டர் துளசிராமன், 44, ஆகியோரை, நேற்று முன்தினம் பையப்பனஹள்ளி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின.
அதாவது வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் பற்றி, தெரிந்து கொள்ள விரும்பும் பெற்றோரை, வீரேஷ், சிவநஞ்சேகவுடா, நவீன், நயன்குமார் ஆகியோர் கண்டறிந்து உள்ளனர்.
அவர்களை மாண்டியாவில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஸ்கேன் செய்து, குழந்தையின் பாலினத்தை கூறியுள்ளனர். இதற்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.
வயிற்றில் வளருவது பெண் குழந்தை என்று தெரிந்ததும், அதை கலைக்க நினைக்கும் பெற்றோரை, மைசூருக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். இதற்காக 50 ஆயிரம் ரூபாய் வசூலித்ததும் தெரிந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த கும்பல் 950 கருக்கலைப்பு செய்த அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்