புதுடில்லி:தலைநகர் டில்லியின் காற்றின் தரம் அபாய கட்டத்தில் நீடிக்கிறது.
இந்த மாதத்தில் மட்டும் நேற்று 11வது நாளாக காற்றின் தரக்குறியீடு அபாய கட்டத்தில் பதிவாகியுள்ளது.
டில்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் மூன்று நாட்கள் காற்றின் தரம் அபாய கட்டத்தில் இருந்தது. கடந்த 2021ல் 12 நாட்களாக இருந்தது.
அதேபோல், 2020ம் ஆண்டு நவம்பரில் ஒன்பது நாட்களும், 2019ல் ஏழு நாட்களும், 2018ல் ஐந்து நாட்களும், 2017ல் ஏழு நாட்களும், 2016ல் 10 நாட்களும், 2015ல் ஆறு நாட்களும் காற்றின் தரக் குறியீடு அபாய நிலையில் பதிவாகியிருந்தது.
வெப்பநிலையில் சரிவு மற்றும் இரவில் காற்றின் வேகம் குறைந்ததால், டில்லியில் காற்றின் தரம் நேற்று முன் தினம் மீண்டும் அபாய கட்டத்துக்குள் நுழைந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 421 ஆக இருந்தது.
ஆனால், இன்று முதல் காற்றில் மாசு குறைந்து தரத்தில் மேம்பாடு ஏற்படும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
டில்லியில் காற்றின் தரக்குறியீடு நேற்று முன் தினம் 415 ஆக பதிவாகியிருந்தது. 23ம் தேதி 390, 22ம் தேதி 394, 21ம் தேதி 365, 20ம் தேதி 348, 19ம் தேதி 301 என பதிவாகி இருந்தது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அமைந்துள்ள காஜியாபாத்தில் நேற்று காற்றின் தரக்குறியீடு 424 ஆக பதிவாகியிருந்தது. அதேபோல குருகிராம் – 345, கிரேட்டர் நொய்டா – 398, நொய்டா – 393, பரிதாபாத் – 426 ஆக பதிவாகி இருந்தது.
பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடுக்கவும், மாசு ஏற்படுத்தும் டீசல் வாகனங்களைக் கண்காணிக்கவும் டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement