Ameer:“சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் தொடக்கமே" – கரு.பழனியப்பன்

‘பருத்தி வீரன்’ படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக அமீருக்கும் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

இயக்குநர் அமீரின் ‘மெளனம் பேசியதே’ மற்றும் ‘பருத்தி வீரன்’ ஆகிய இரண்டு படங்களும் சூர்யா, கார்த்தி இருவரது திரை வாழ்விலும் மிக முக்கியமான படங்களாக அமைந்தவை.

இந்நிலையில் சமீபத்தில் கார்த்தியின் 25 படமான ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு வீழாவில் கார்த்தியை வைத்து இயக்கிய இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், அமீர் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அமீரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகையில் அமீர், தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவால் தான் நெருங்கி பழகி வந்த சிவக்குமார், சூர்யா, கார்த்தியிடம் தற்போது சரியாகப் பேசுவதில்லை என்றும் கூறியிருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

ஞானவேல் ராஜா

இதையடுத்துத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில், “அமீர் கடனில் இருந்தார், அவருக்கு உதவுவதற்காகத்தான் ‘பருத்திவீரன்’ படத்தை நான் தயாரித்தேன். படப்பிடிப்பில் செலவானதற்கு அவர் சரியாகக் கணக்குக் காட்டவில்லை. படத்தில் வெளியீட்டின்போது சூர்யாதான் கையில் இருக்கும் பணத்தைப்போட்டுப் படத்தை வெளியிட்டார். கார்த்தியை அமீர் ஒன்றும் அறிமுகப்படுத்தவில்லை. நாங்கள்தான் அமீருக்கு உதவி செய்தோம். அவர் சூர்யா, கார்த்தியிடம் பேசாமல் போனதற்கு நான் காரணமில்லை. அவரின் நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம்” என்று கூறியிருந்தார்.

ஞானவேல் ராஜாவின் குற்றச் சாட்டிற்கு அமீர் அறிக்கை மூலம், “நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்குச் சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்ற காரணத்தினாலும், ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.

இயக்குநரும், நடிகருமான சசிகுமார் அமீருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ‘பருத்திவீரன்’ படத்தில் உதவிய இயகுநராகப் பணியாற்றியிருந்த இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

அதில், ‘அமீர் அண்ணன்தான் படத்தை முடிக்க போதிய பணமில்லாமல் பலரிடன் கடன் வாங்கிப் படத்தை முடித்தார்’ என்றும் ‘சிவகுமார் சாருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும், கார்த்தியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் அமீர் பருத்திவீரனை அவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் எடுத்து முடித்தார். அதை உடனிருந்து பார்த்தவன் நான்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் கரு. பழனியப்பன், ” ‘மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர் ! இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய பிற கலைஞர்களும் பேச வேண்டும்! கார்த்தி உட்பட” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.