பெலகாவி : ‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், சென்னையைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரி, கர்நாடக மாநிலம் பெலகாவியில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் கன்டோன்மென்ட் போர்டு அலுவலகம், பெலகாவி கானாபுரா ரோட்டில் உள்ளது. மராத்தா காலாட்படை ராணுவ பயிற்சி மையத்தின் வளர்ச்சி, உள்கட்டமைப்புகளை பராமரிக்கும் பணியை, அந்த அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த அலுவலக ஆள்சேர்ப்பில் முறைகேடு நடந்ததாக, சி.பி.ஐ.,க்கு புகார் சென்றது. கடந்த 18ம் தேதி சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது இங்கு தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய, சென்னையைச் சேர்ந்த ஆனந்த், 40, மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் அலுவலக குடியிருப்பில் தனியாக வசித்த ஆனந்த், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும், குடியிருப்பில் இருந்து வெளியே வரவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் கேம்ப் போலீசார் அங்கு சென்றனர்.
கதவை தட்டினர்; திறக்கப்படவில்லை. கதவை உடைத்து கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். படுக்கை அறையில் கட்டிலில், ஆனந்த் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே, விஷ பாட்டில் கிடந்தது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனந்த் மரணம் குறித்து, பெலகாவி துணை போலீஸ் கமிஷனர் ரோகன் ஜெகதீஷ் அளித்த பேட்டி:
கன்டோன்மென்ட் போர்டு அலுவலகத்தில் பணியாற்றிய, ஆனந்த் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்தார். ஆன்லைனில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொள்வதாக, கடிதம் எழுதி உள்ளார்.
அவரது மொபைல் போன், மடிக்கணினி பறிமுதல் செய்து, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம். அவருடன் வேலை செய்தவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளோம். தமிழகத்தில் உள்ள அவரது பெற்றோருக்கும், தகவல் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனந்த் எழுதிய கடிதத்தில், “பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். என்னால் உங்களை சரியாக, கவனிக்க முடியவில்லை. சிங்கப்பூரில் உள்ள சகோதர, சகோதரிகள் குழந்தையாக பிறந்து, உங்களை பார்க்க மீண்டும் வருவேன். ஆன்லைன் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். கடனைத் திரும்ப செலுத்த முடியாமல், நெருக்கடியில் உள்ளேன். இதனால் தற்கொலை செய்கிறேன்,” என்று எழுதியிருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்