பெங்களூரு:காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பிராஞ்சல் உடல், ராணுவ மரியாதையுடன் பெங்களூரில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
ஜம்மு – காஷ்மீரின் ரஜோரியில் 22ம் தேதி பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 63வது ராஷ்டிரிய ரைபிள் பட்டாலியன் குழுவின் கேப்டனான, பெங்களூரை சேர்ந்த பிராஞ்சல், 29, உட்பட, ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் உடல்கள், நேற்று முன்தினம் காலை, புதுடில்லிக்கு விமானங்களில் வந்தன. அங்கிருந்து ஐந்து பேரின் உடல்களும், அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு, எச்.ஏ.எல்., விமான நிலையத்திற்கு, பிராஞ்சலின் உடல் வந்தடைந்தது.
அவரது உடலுக்கு கர்நாடகா கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, அமைச்சர் ஜார்ஜ், பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச்சடங்கு
பின்னர் ராணுவ வாகனத்தில், பெங்களூரு ரூரல் ஆனேக்கல் தாலுகா ஜிகினி நந்தவன லே – அவுட்டில் உள்ள, அவரது வீட்டிற்கு பிராஞ்சல் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பிராஞ்சலின் உடலுக்கு, ஆனேக்கல், ஜிகனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் ஆகியோரும், இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மதியம் 2:00 மணிக்கு பிராஞ்சலின் உடல் இருந்த, கண்ணாடி பேழை ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக பிராமண மரபுப்படி பிராஞ்சல் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்தனர்.
நந்தவன லே – அவுட்டில் இருந்து பிராஞ்சலின் உடலை சுமந்து புறப்பட்ட, ராணுவ வாகனம் ஜிகினி ஓ.டி.சி., சதுக்கம், பன்னரகட்டா மெயின் ரோடு, நைஸ் ரோடு சந்திப்பு, கோனப்பன அக்ரஹாரா சதுக்கம், கூட்லு கேட் வழியாக, சோமசுந்தர பாளையாவில் உள்ள, மின்மயானத்திற்கு சென்றது.
சாலையின் இருபுறமும் கூடி நின்ற மக்கள், மலர்களை துாவி அஞ்சலி செலுத்தினர். ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழங்கினர். மின் மயானத்தில் அவரது உடல், ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. துப்பாக்கியால் மூன்று முறை, ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டனர்.
ரூ. 50 லட்சம்
உயிரிழந்த பிராஞ்சல் குடும்பத்தினருக்கு கர்நாடகா அரசு, 50 லட்சம் ரூபாய் அறிவித்து உள்ளது. பிராஞ்சலின் சொந்த ஊர் மைசூரு. ஆனால் அவரது தந்தை வெங்கடேஷ், மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், நிர்வாக இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் அனுராதா. பள்ளி, கல்லுாரி படிப்பை மங்களூரில் படித்தார்.
இதன் பின், மத்திய பிரதேசத்தில் உள்ள, ராணுவ கல்லுாரியில் இன்ஜினியரிங் படித்த பின், ராணுவத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பிராஞ்சலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது மனைவி அதிதி, சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.டெக் படித்து வருகிறார்.
சிறுவயதிலேயே ராணுவ ஆசை!
இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பிராஞ்சலின் மூன்றாம் வகுப்பு ஆசிரியை சுமா கூறியதாவது: பிராஞ்சல் மூன்றாம் வகுப்பு படித்தபோது, ‘எதிர்காலத்தில் நீ என்ன ஆக வேண்டுமென, ஆசைப்படுகிறாய்?’ என கேட்டேன். சற்றும் யோசிக்காமல், ‘ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்கு சேவை செய்வேன்’ என்றார். எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அவர் சொன்னபடி ராணுவத்தில் சேர்ந்தார். தேசிய சாரணர் இயக்கத்திலும் இருந்தார். மங்களூரு வரும் போது எல்லாம், எங்களை சந்தித்தார். அவரது மரணம் ஈடுகட்ட முடியாத இழப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்