2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா அவர் முன்னதாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேட் செய்யப்படவிருக்கிறார் எனும் செய்தி பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இப்போது குஜராத் அணி தாங்கள் விடுவித்திருக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் இல்லை.

ஆக, ஹர்திக்கை குஜராத் அணி தக்கவைத்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது நிரந்தரமில்லை. மினி ஏலத்திற்கு முன்பாக வருகிற நாட்களில் ஹர்திக் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பும் வகையில் ட்ரேட் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது.

விடுவிக்கும் வீரர்கள் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாள். இந்நிலையில், குஜராத் அணி சார்பில் யாஷ் தயாள், கே.எஸ்.பரத், ஷிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடேன் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், தசுன் சனகா ஆகியோர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மும்பை அணியின் சார்பில் அர்ஷத் கான், ரமன்தீப் சிங் , ஹிர்திக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோப்ரா ஆர்ச்சர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டுயன் யான்சன், ஜெய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டன், சந்தீப் வாரியர் ஆகியோரை விடுவித்துள்ளது.
ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு ட்ரேட் செய்யப்படுகிறார் என்ற செய்திகள் தீயாய் பரவிய நிலையில், ஹர்திக் பாண்ட்யா இன்னமும் குஜராத் அணியிலேயே நீடிக்கிறார். ஆனால், இங்கேதான் ஒரு ட்விஸ்ட். அணிகள் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட மட்டுமே இன்று கடைசிநாள். மற்றபடி அணிகள் தங்களுக்குள் ட்ரேடிங் முறையில் வீரர்களை பண்டமாற்றம் செய்துகொள்ள டிசம்பர் 12 ஆம் தேதி வரை கெடு இருக்கிறது.

அதாவது, டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் மினி ஏலத்திற்கு ஒரு வாரம் முன்பு வரைக்கும் வீரர்களை அணிகள் ட்ரேடிங் செய்துகொள்ளலாம். ஆக, ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு செல்கிறாரா இல்லையா என்பதை அறிய நாம் டிசம்பர் 12 ஆம் தேதி வரைக்கும் காத்திருக்க வேண்டும்.