பாங்காக்: ”ஹிந்துக்களின் குரலை ஒலிக்கும் வகையில், உலகெங்கும் உள்ள ஹிந்து அமைப்புகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு தேவை,” என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே குறிப்பிட்டார்.
ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில், உலக ஹிந்து மாநாடு நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியதாவது:
உலகின் பல்வேறு பகுதிகளிலும், பல ஹிந்து அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. மொழி, ஜாதி, துணைப் பிரிவு, குருக்கள் என, இவர்கள் பல பிரிவுகளாக உள்ளனர். தங்களுடைய பணிகளை அவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
ஆனால், ஹிந்துக்களிடம் உள்ள இந்த பன்முகத்தன்மையால், ஹிந்து என்ற பொதுவான நோக்கம் காணாமல் போய்விடுகிறது. நம்முடைய நோக்கங்கள் சிறந்ததாக இருந்தாலும், ஒருமித்த நோக்கத்தை மறந்து விடக் கூடாது. சில நேரங்களில், சில இடங்களில், இந்த பன்முகத்தன்மை என்பது நம்மிடையேயான ஒற்றுமையை குலைத்து விடுகிறது.
இந்த வேற்றுமைகளை, கருத்து வேறுபாடுகளை களைந்தெடுக்கும் வகையில், ஹிந்துக்களின் ஒட்டுமொத்த குரலை ஒலிக்கும் வகையில், ஹிந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement