கராச்சி: வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் காலம் தாழ்த்துவதால் வீரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தியாவில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது.
இதனையடுத்து, வஹாப் ரியாஸ் தலைமையில் புதிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டு வீரர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் வஹாப் ரியாஸ் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதி வழங்கும் விஷயத்தில் அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியின் காரணமாகவே, பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் ஓய்வு முடிவை அறிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். தேசிய அணியில் இடம்பெற வேண்டும் என விரும்புபவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய அரபு எமீரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காகவே, இமாத் வாசிம் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அபுதாபியில் நடக்கும் டி-10 லீக் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானை சேர்ந்த சில வீரர்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement