பெங்களூரு : ”முன்னாள் அமைச்சர் சோமண்ணாவுக்கு, நான் போன் செய்தேன்; என் அழைப்பை அவர் ஏற்கவில்லை. என்னால் என்ன செய்ய முடியும்?” என, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா கேள்வி எழுப்பினார்.
கர்நாடக மாநில பா.ஜ., தலைவராக தேர்வு செய்த பின், கட்சியில் அதிருப்தி அதிகரித்துள்ளது. இப்பதவி எதிர்பார்த்து காத்திருந்த சோமண்ணா எரிச்சலில் உள்ளார். அவரை சமாதானப்படுத்த முயற்சி நடக்கிறது.
துமகூரில் சோமண்ணா நேற்று கூறியதாவது:
என் தொகுதியை விட்டு விட்டு வேறு தொகுதியில் போட்டியிட்டது பெரிய குற்றம். அமித் ஷா, என் வீட்டில் அமர்ந்து கொண்டு, என் உயிரை வாங்கினார். இரண்டு மணிநேரம் வீட்டில் அமர்ந்திருந்தார். முடியாது என, கூறினேன். பிரதமர், டில்லிக்கு என்னை வரவழைத்து போட்டியிடும்படி கூறினார்.
பசனகவுடா பாட்டீல் எத்னால், அரவிந்த் லிம்பாவளி, அரவிந்த் பெல்லத் ஆகியோரை, என்னுடன் அழைத்துக் கொண்டு டிசம்பர் 7ல், டில்லிக்கு செல்வேன். கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து, என் கருத்துகளை கூறுவேன். வலியை விவரிப்பேன். அவர்களின் முடிவை தெரிந்து கொண்டு, என் அடுத்தகட்ட முடிவை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று எடியூரப்பா கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் சோமண்ணாவை, கட்சியில் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். துமகூரில் ஊடகங்களின் சந்திப்பில், அவர் பேசியதை நானும் கவனித்தேன்; அவருக்கு போன் செய்தேன்; என் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவர் பேச முன் வரவில்லை என்றால், நான் என்ன செய்வது?
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement