Vaadivaasal: `விடுதலை 2' படத்தில் டீ ஏஜிங் டெக்னாலஜி; `வாடிவாசல்' ஆரம்பம் எப்போது?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியானது ‘விடுதலை’ திரைப்படம். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, ஒரு பாகமாகவே இருந்தது.

ஆனால், படப்பிடிப்பு போகப்போக, இந்தக் கதையை இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது போல, நிறைய கேள்விகளுடன் முதல் பாகம் நிறைவுற்றது. படத்தில் நடித்த ஒவ்வொருவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது. இதன் இரண்டாம் பாகத்திற்கான பகுதிகள் பலவும் ஏற்கெனவே படமாக்கப்பட்டன. இவை தவிர, மேலும் நிறைய புதிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சில கதாபாத்திரங்களும் புதிதாக சேர்க்கப்பட உள்ளன. 

வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருக்கிறார். அவருக்கான பகுதிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. இரண்டாம் பாகத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தின் இளமை கால பகுதிகள் வர இருக்கின்றன. அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய் சேதுபதியை இளமையாகக் காட்டவிருக்கிறார்கள். அதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

விஜய் சேதுபதி

‘விடுதலை – 1’ படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதற்கான இந்தப் படக்குழு இயக்குநரோடு கோவா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் இன்னும் 30 நாள்கள் இருக்கிறது என்கிறார்கள். அவற்றையெல்லாம் முடித்துவிட்டு, படம் அடுத்த வருடம் மார்ச், ஏப்ரல் சமயத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இந்தப் படத்தின் மீதான ஆவலும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. சூர்யா இதற்கான காளைகளுடன் பழகி, அதற்கான ஒத்திகையிலும் ஈடுபட்டு கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. சூர்யாவுக்கும் அடுத்தடுத்து பல லைன் அப்கள் இருக்கின்றன. இதில் ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்ற கேள்வி இருந்தது.

சூர்யா வெற்றிமாறன் வாடிவாசல்

இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா, அடுத்ததாக, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘புறநானூறு’ படத்திற்கு போகிறார். அதனை முடித்துவிட்டு, ‘வாடிவாசல்’ படத்திற்கு தான் வருகிறார். ‘விடுதலை 2’ படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததும் இயக்குநர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ பணிகளில் முழுமையாக இறங்க இருக்கிறார். இதைப் பற்றிய அறிவிப்புகள் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.