உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க உதவி செய்யும் திருச்செங்கோட்டு நிறுவனம்!

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியின்போது கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளனர். சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் கடந்த 12 நாள்களுக்கும் மேலாகப் போராடி வந்த நிலையில், மீட்புப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

மீட்புப் பணியின் தொடக்கத்தில், பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இயங்கும் பி.ஆர்.டி. டிரில், தரணி ஜியோடெக் ஆகிய நிறுவனங்களின் உபகரணங்கள் மூலம் ஒரு நம்பிக்கை ஒளி கிடைக்கப்பெற்றது. அதன் மூலம் குழாய் அமைத்து, சிக்கியுள்ள தொழிலாளர்களைத் தொடர்புகொண்டனர். அவர்களுக்கு அத்தியாவசியத் தேவையான ஆக்சிஜன், மருந்து மற்றும் உணவுகள் அதன் வழியாகவே வழங்கப்பட்டுள்ளன.

பரந்தாமன்

இதுகுறித்து பி.ஆர்.டி. டிரில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பரந்தாமன் கூறுகையில், “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு எங்கள் நிறுவனத்தில் வீடுகளுக்கான போர்வெல் இயந்திரங்கள் தொடங்கி சுரங்கங்கள் தோண்டுவதற்கான ரிக் இயந்திரங்கள்வரை தயாரித்து வருகிறோம். எங்களின் முக்கிய வாடிக்கையாளரான தரணி ஜியோடெக் நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போதுதான் எதிர்பாராத விதமாக அந்தச் சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களின் உயிரைக் காக்கும் வகையில் அவர்களுக்கு ஆக்சிஜன், உணவு மற்றும் மருந்தை உடனடியாக அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிடைமட்டமாக (horizontal) சுரங்கம் தோண்டுவதில் நிபுணத்துவம் பெற்ற தரணி ஜியோடெக் நிறுவனத்தை மத்திய அரசு அதிகாரிகள் அணுகினர்.

உத்தரகண்ட் சுரங்கம்

இதைத் தொடர்ந்து, எங்களது நிறுவனம் தயாரித்த ஜியோ டிரில் என்ற ஜிடி-5 என்ற கிடைமட்டமாக டிரில் செய்யக் கூடிய ரிக் இயந்திரத்தை தரணி ஜியோடெக் நிறுவனம் பயன்படுத்தியது. இதுபோன்ற நெருக்கடி காலங்களில் கிடைமட்டமாக டிரில் செய்வதென்பது மிகவும் சிக்கலான விஷயமாகும். இந்த இயந்திரத்தின் செயல்பாடு நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதால், தரணி ஜியோடெக் நிறுவனத்துக்கு உதவியாக எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவை உத்தரகாண்டுக்கு அனுப்பி வைத்தோம்.

மீட்புப் பணி

அங்குள்ள கள நிலவரப்படி, எங்கள் இருவரது நிறுவன ஊழியர்களும் கலந்தாலோசித்து, சிமெண்ட்ரிஸ் டிரில்லிங் டெக்னாலஜி மூலம் துளை அமைக்கலாம் என முடிவெடுத்தோம். இந்த சிமெண்ட்ரிஸ் டெக்னாலஜி என்பது துளையிடும்போது உடன் செல்லும் கேஸிங் பைப் ட்ரில்லரை வெளியில் எடுக்கும்போது, துளைக்குள்ளேயே நின்றுவிடும். இதன் மூலம் வேகமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

ரிக் இயந்திரம்

ஆனால், அதற்கான பெரும்பாலான உபகரணங்கள் திருச்செங்கோட்டில்தான் இருந்தன. இதை மத்திய அரசிடம் தெரிவித்தோம். அவர்களும் போர்க்கால அடிப்படையில் திருச்செங்கோட்டில் இருந்து டிரில்லிங் செய்வதற்கான அனைத்து உபகரணங்களையும் விமானம் மூலம் உத்தரகாண்டுக்கு எடுத்து வந்தனர். பெரிய அளவில் துளையிட்டால் அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உயிரைக்காக்கும் ஆக்சிஜன், உணவு, மருந்தை அனுப்ப 6 இன்ச் அகலத்திலான குழாய் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.

முதல் முறையாக இரும்புக் கம்பி குறுக்கிட்டதால் அதைத் தொடர்ந்து துளையிட முடியவில்லை. இரண்டாவது முறையும் தடங்கல் ஏற்பட்டது. இரண்டு நாள்கள் தொடர் போராட்டத்தின் முடிவாக மூன்றாவது முறை 54 மீட்டர் டிரில் செய்து தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்தோம். இந்தக் குழாய் மூலம் கேமராவை அனுப்பி சிக்கிக்கொண்டுள்ள தொழிலாளர்களின் நிலை என்ன என்பதை அறிய முடிந்தது. அதுமட்டுமல்லாமல் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கும் அவர்களை நேரடியாகக் காண முடிந்தது. அதுமட்டுமல்லாமல் மீட்புப் படையினருக்குமே தொழிலாளர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆக்சிஜன் சிறிய குழாய் மூலம் அனுப்பப்பட்ட நிலையில், 6 இன்ச் விட்டமே உள்ளதால், இரண்டு பக்கமும் கம்பிபோல் அமைப்பை உருவாக்கி வாட்டர் பாட்டிலில் உணவு, தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ரிக் இயந்திரத்துடன் ஊழியர்கள்

தற்போது அவர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அவர்கள் அனைவரும் நலத்துடன் மீட்கப்படவுள்ளனர். இந்த நேரத்தில் நாங்கள் தயாரித்த இயந்திரம் 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது எங்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.