உத்தராகண்ட் சுரங்க விபத்து | 31 மீட்டர் அளவுக்கு செங்குத்து துளையிடுதல் நிறைவு; மீட்புக் குழு தகவல்

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் இதுவரை 31 மீட்டர் செங்குத்து துளையிடுதல் பணி நிறைவடைந்துள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இன்று 16வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெறுகிறது.

உத்தராகண்டில் சில்க்யாரா – பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில்,41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பக்கவாட்டில் துளையிடும் முயற்சி கைவிடப்பட்டது.

அதற்குப் பதிலாக, சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு, தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது. செங்குத்தாக துளையிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மொத்தம் 100 மணி நேரத்தில் 81 மீட்டர் செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்பதே திட்டம். இந்நிலையில் இதில் இதுவரை 31 மீட்டர் செங்குத்து துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

செங்குத்தாக துளையிடுதல் குறித்து சாலைப் போக்குவரத்து கூடுதல் செயலர் மகமுது அகமது நேற்று, “ஒவ்வொரு முறை துளையிடும்போதும் குறிப்பிட்ட இடைவெளியில் இயந்திரத்தின் ஊசி நுணியை மாற்ற வேண்டியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றும் நாளையும் பனி, மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்படும் அச்சம் நிலவுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.