பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், `ஹமாஸ் குழு ஒழிப்பு நடவடிக்கை’ என்ற பெயரில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. அதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 7) ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய திடீர் தாக்குதலின் அடிப்படையில், இஸ்ரேல் போர் புரிந்துவருகிறது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200-க்கும் மேற்பட்டோரும், பாலஸ்தீன் தரப்பில் 13,000-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது, ஹமாஸ் தங்களிடம் இருக்கும் 200 இஸ்ரேல் பணயக் கைதிகளை குறிப்பிட்ட அளவில் விடுவித்துவருவதால், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்திவைத்திருக்கிறது.

இருப்பினும், ஹமாஸை நம்பவேண்டாம் என, அமெரிக்கா கூறி வருகிறது. இப்படியான சூழலில், அக்டோபர் 17-ம் தேதியன்று காஸாவிலுள்ள மருத்துவமனையொன்றில் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில், மருத்துவமனை ஊழியர்கள், அதிலிருந்த நோயாளிகள், குழந்தைகள் என 471-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்தான் என பாலஸ்தீனம் குற்றம்சாட்டியது.
ஆனால், `இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. ஹமாஸ்தான் இதை நடத்தியது’ என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்தது. இஸ்ரேலுக்கு ஆயுத உதவியளிக்கும் அமெரிக்காவும், அவ்வாறே கூறியது. இருப்பினும், ஐ.நா அமைப்பு உட்பட பல்வேறு உலக நாடுகள் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்தன. அதன்படி, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch – HRW) இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், அது தொடர்பான விசாரணை அறிக்கையை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டிருக்கிறது.

நேற்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், `அக்டோபர் 17 அன்று காஸாவிலுள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில், பொதுமக்கள் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு, பாலஸ்தீன ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் நிறைந்த ராக்கெட்டுகளால் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள், செயற்கைக்கோள் படங்கள், அதை நேரில் கண்ட சாட்சிகள், நிபுணர்களுடனான நேர்காணல்கள் ஆகியவை, இந்த தாக்குதல் தொடர்பாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கின்றன. 471 பேர் இறந்ததாகவும், 342 பேர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள், வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் காட்டுகின்றன.

எனவே, இரு நாடுகளும் தங்களிடமுள்ள வெடிமருந்துகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும். அப்போதுதான் முழு விசாரணை முடிவு பெறும்’ என HRW தெரிவித்திருக்கிறது. இருப்பினும், ஹமாஸின் மூத்த அதிகாரி பாசெம் நைம் (Basem Naim), HRW-ன் இந்த அறிக்கை இஸ்ரேலுக்கு சாதகமானதாக இருப்பதாகவும், ஏற்புடையதாக இல்லை எனவும் குற்றம்சாட்டியிருக்கிறார். அதேசமயம், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை இயக்குநர் இம்மானுவேல் நஷோன் (Emmanuel Nahshon) X சமூக வலைதளப் பக்கத்தில், “இரண்டு நாள்களில் முழு உலகுக்கும் தெரிந்த உண்மையைக் கண்டறிய HRW-க்கு ஒரு மாதத்துக்கும் மேலாகியிருக்கிறது” என விமர்சனம் செய்திருக்கிறார்.