நடந்தது இதுதான்: சுதா கொங்கரா விளக்கம்

பருத்தி வீரன் பட பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அந்த படம் குறித்து அளித்த பேட்டியில் இயக்குனர் அமீர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு அமீர் பதிலளித்தார். அவருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் அதே நேர்காணலில் பேசிய ஞானவேல் ராஜா, “மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த கார்த்தி, சுதா கொங்கரா, நான் 3 பேரும் அமீர் இயக்கிய 'ராம்' படத்தை பார்க்க சென்றோம். படத்தை பார்த்த சுதா படத்தின் மேக்கிங் சரியில்லை என்றார்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து சுதா கொங்கரா தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்.

நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன். என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாருதான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை. இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம். நன்றி. என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.