பருத்திவீரன்: `படப்பிடிப்பின் போது நடந்தது இதுதான்!' – பொன்வண்ணன் தெரிவித்த தகவல்கள்

பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் அப்படத்தை இயக்கிய அமீர் இருவருக்கும் இடையேயான மோதல்தான் தற்போது தமிழ் சினிமாவின் ‘டாக் ஆஃப் தி’ டவுனாக இருக்கிறது.

‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில்  இயக்குநர் அமீர் அறிக்கை மூலம் ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார். அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.  இந்நிலையில் தற்போது ‘பருத்திவீரன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பொன்வண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அமீருக்கு ஆதரவாகப் பதிவு ஒன்றைப்  பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்தப் பதிவில், “‘பருத்தி வீரன்’ திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப் பார்த்தேன்!

பருத்திவீரன்

அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த  நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளைச் செய்தார் என்பதை நானறிவேன்! பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பையும் அவருக்குத் திருப்தி வரும் வரை பல நாள்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களைச் சமாதான்படுத்திவிட்டு, டப்பிங், எடிட்டிங், ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மனநிலையுடன்தான்  வேலை பார்த்தார்.

‘பருத்திவீரன்’ திரைப்படம்

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான், பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாகச் சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்குக் கிடைத்த  ‘தேசிய விருது’ அங்கீகாரங்காளாலும் அது உயரிய இடத்தைப் பிடித்தது. படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்குப் பின்பும், திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும், பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது.

ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக திருடன், வேலை தெரியாதவர் எனக் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல! அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும் வக்கிரமாக இருந்தது.

தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..! இனியும் உங்களுக்கிடையேயான பிரச்னைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள். பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்…” என்று பதிவிட்டிருக்கிறார்.

பொன்வண்ணனின் இந்தக் கருத்து குறித்து உங்களின் பார்வை என்ன?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.