மதுரை: மதுரை மாநகரில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை – தெற்கு மாசி வீதியில் இயங்கி வரும் ஜானகி ஜூவல்லர்ஸ் கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் தீ பரவிய நிலையில் அனைவரும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இருந்தும் இந்தக் கடையில் பணியாற்றி வந்த 49 வயதான மோதிலால், மூன்றாவது மாடியில் சிக்கிக் கொண்டுள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்துள்ளனர்.
அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கிக் கொண்ட மோதிலாலை மீட்கும் பணியையும் மேற்கொண்டுள்ளனர். இருந்தும் கடையிலிருந்து கரும்புகை எழுந்த காரணத்தால் அவரை மீட்பது சவால் ஆனது. சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோதிலால் மீட்கப்பட்டுள்ளார். அப்போது அவர் தீ காயங்களுடன் சுயநினைவின்றி இருந்துள்ளார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளானர்.
இந்த விபத்து குறித்து மதுரை நகர காவல் நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் இதே தெற்கு மாசி வீதியில் அமைந்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை நகரில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வரும் முக்கிய வீதியாக தெற்கு மாசி வீதி உள்ளது.