உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில், கல்லூரி மாணவர்களுக்கு ஸ்னாப்சாட், வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் போதைப்பொருள்களை சப்ளை செய்துவந்த கும்பலை போலீஸார் இன்று கைதுசெய்திருக்கின்றனர். சமீபத்தில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கெளதம புத்தர் நகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்திய போலீஸ் அதிகாரிகள், பல போதைப்பொருள் சப்ளையர்களைக் கைதுசெய்திருந்தனர்.

கடந்த வார தொடக்கத்தில்கூட, 260 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்திருந்தது. தற்போது அதன்தொடர்ச்சியாக, நொய்டாவில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துவந்த ஒன்பது பேர் கொண்ட கும்பலை போலீஸார் இன்று கைதுசெய்து, 15 கிலோ கஞ்சா, 30 கிராம் கோகைன், 20 கிராம் போதை மாத்திரைகள், 150 கிராம் ஹாஷ் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இவை மட்டுமல்லாது, இரண்டு எலக்ட்ரானிக் எடை இயந்திரங்கள், 10 செல்போன்கள், ரொக்கமாக ரூ.3,200 ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதில், இந்தக் கும்பலின் தலைவர் அக்ஷய் குமார், தைவானில் வேலைப்பார்க்கும் தன்னுடைய மனைவி மூலமாக போதைப்பொருள்களை வாங்கி, அவற்றை நொய்டா முழுவதுமுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சப்ளை செய்துவந்ததாகவும், இதே கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபர் நரேந்திரன் (ராஜஸ்தான்) கல்லூரி வளாகங்கள் மற்றும் வெளியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்துவந்ததாகவும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், இந்தக் கும்பல் அமேசான், ஃபிளிப்கார்ட்டிலிருந்து டெலிவரி செய்யப்படும் சிறிய பார்சல்களைப்போல, ஸ்னாப்சாட், டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு சிறிய அளவிலான பார்சல்களில் போதைப்பொருள்களை சப்ளை செய்து, ஒவ்வொரு பார்சலுக்கும் ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை வசூலித்திருக்கிறது என போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில், நொய்டாவிலுள்ள அமிட்டி பல்கலைக்கழக (Amity University) மாணவர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.