2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஹமாஸ் தீவிரவாதிகள் 17 பிணைக் கைதிகளை சனிக்கிழமைவிடுவித்தனர். இதில், இஸ்ரேலியர்கள் 13 பேரும், தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் நேற்று இஸ்ரேலை வந்தடைந்தனர். அதற்கு பதிலாக 33 சிறார்கள் உட்பட 39 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

போர் நிறுத்தம் உள்ள 4 நாட்களில் மொத்தம் 50 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக 150 பாலஸ்தீன கைதிகளை மாற்றிக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஹமாஸ் விடுவித்த சிறைக் கைதிகள் எகிப்தின் ரஃபா எல்லையில் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 13 இஸ்ரேலியர்களில் ஆறு பேர் பெண்கள் மற்றும் ஏழு பேர் சிறார்கள் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்துள்ள பிணைக் கைதிகள்முதலில் இஸ்ரேல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கே அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் காத்துக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்தது.

காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 9 வயது இஸ்ரேலிய சிறுமியான எமிலியையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். 50 நாட்கள் பெரும் தவிப்புக்குப் பிறகு அந்த சிறுமியை கண்ட அவரது பெற்றோர் ஆனந்தக் கண்ணீருடன் ஆரத் தழுவி சிறுமியை வரவேற்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 240 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 14,800 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்றுமுன்தினம் தெரிவித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.