துமகூரு, கடன் தொல்லை மற்றும் கீழ் வீட்டினரின் தொந்தரவால் விரக்தியடைந்த தம்பதி, தங்களின் மூன்று பிள்ளைகளைக் கொன்று, தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை பின்னணியில், கந்து வட்டி பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துமகூரு மாவட்டம், சிராவைச் சேர்ந்த கரீப் சாப், 32. இவர், துமகூரின் சதாசிவநகரில் வாடகை வீட்டில் வசித்தார்.
இவரது மனைவி சுமய்யா, 30. இந்த தம்பதிக்கு ஹஜினா, 14, என்ற மகளும், முகமது ஷபீர், 10, ஷபீர், 8, என்ற இரண்டு மகன்களும் இருந்தனர்.
தம்பதி நேற்று முன் தினம் இரவு, மகளையும், இரண்டு மகன்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
அதன்பின், தாங்களும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தம்பதி தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அத்துடன் வீடியோவிலும் தற்கொலைக்கான காரணத்தை அவர்கள் விவரித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கரீப் சாப், மளேகோட்டேவில் உணவகம் நடத்தி வந்தார். பல இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார்.
மற்றொரு பக்கம் இவர்களின் கீழ் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் கடும் நெருக்கடி கொடுத்துள்ளதாக கடிதத்திலும் வீடியோவிலும் கரீப் சாப் விவரித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த தம்பதி, தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. கீழ் வீட்டில் உள்ளவர்களால் தங்களுக்கு நேர்ந்த பிரச்னைகளையும் விவரித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
துமகூரில் நேற்று, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
ஒரே குடும்பத்தின் ஐந்து பேர் மரணம் அடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். கரீப் சாப் கடிதத்தில் எழுதியிருந்த ஐந்து பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில், கந்து வட்டி விவகாரம் இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இதற்கு கடிவாளம் போட நடவடிக்கை எடுப்போம்.
வட்டித்தொழில் நடத்துவோர் மீது, சட்டரீதியில் வழக்கு பதிவாகும். விசாரணைக்கு பின், கரீப் சாப் குடும்பத்தினர் தற்கொலைக்கு, என்ன காரணம் என்பது தெளிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்