வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வெலிங்டன்: முன்னாள் அரசு கொண்டு வந்த புகையிலை தடையை புதிய அரசு ரத்து செய்யும் என புதிதாக நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.
2025ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி, அந்நாட்டில் 2009ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் எவருக்கும் சிகரெட், புகையிலை விற்கக் கூடாது.
அதாவது 2008க்கும் பின் பிறந்தவர்கள் புகையிலை, சிகரெட் வாங்க முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. இதனால் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு சிவப்பு கொடி காட்டப்பட்டது.
சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில், அந்நாட்டு தேசிய கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, பிரபல தொழில் அதிபர் கிறிஸ்டோபர் லக்சன், 53. இன்று(நவ.,27) பிரதமராக பதவியேற்றார்.
முதல் முன்னுரிமை
பின்னர் கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது: தான் ஏற்றிருக்கும் பிரதமர் பதவியானது, அருமையான பொறுப்பு. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்க உள்ளேன். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஆட்சியின் 100 நாள் செயல் திட்டத்தை விரைவில் தயார் செய்வது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.
கட்டுப்பாடுகள்
முந்தைய அரசு விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை, குறிப்பாக சிகரெட்டில் குறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு மற்றும் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது மீண்டும் புகையிலைக்கு புதிய அரசு பச்சைக்கொடி காட்ட முடிவு செய்துள்ளதால் புகையிலை பொருட்கள் தயார் செய்யும் நிறுவனங்கள் மத்தியில் மகிழ்ச்சி கிளம்பி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement