மேற்கு கரை : போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் அரசு விடுவித்த, பாலஸ்தீன கைதிகளில், 30க்கும் மேற்பட்டோர் மேற்கு கரை பகுதியை நேற்று சென்றடைந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த மாதம், 7ம் தேதியில் இருந்து போர் நடந்து வந்தது.
இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், தான் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளில் ஒரு பகுதியினரை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்தது. அதேபோல், சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளில் சிலரை விடுவிப்பதாக இஸ்ரேல் அறிவித்தது.
இதன்படி, இதுவரை, ஹமாஸ் பயங்கரவாதிகள், 50 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளனர். அதேபோல், 150 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் அரசு விடுவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் அரசால் விடுவிக்கப்பட்ட கைதிகளில், 30க்கும் மேற்பட்டோர், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் மேற்கு கரை பகுதிக்கு நேற்று சென்றடைந்தனர்.
அவர்களுக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே 14 இஸ்ரேலியர்கள் உட்பட 17 பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பு நேற்றிரவு விடுவித்தது.
மேற்கு கரை பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுடனான போரில், வடக்கு காசாவின் பொறுப்பாளரான அஹமது அல் காந்தோர் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸ் அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.
உளவு பார்த்தவர்கள் கொலை!
பாலஸ்தீனியர்கள் வசிக்கும் மேற்கு கரை பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்த, இரண்டு பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, பயங்கரவாத அமைப்பினரால் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும், அவர்களுடைய உடல்களை, சாலையில் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். அங்குள்ள கம்பத்தில் உடல்களை தொங்க விட்டனர். இது தொடர்பான, ‘வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்