உதகை: உதகையில் மழை, பனிமூட்டமான காலநிலைகளால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை, சில நேரங்களில் மழையின்றி பனிமூட்டம் ஆகிய கால நிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதுபோன்ற மாறுபட்ட கால நிலைகளால் பொது மக்களுக்கு தலை வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். மாறுபட்ட காலநிலைகளால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில், தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காதுகளில் குளிர் காற்று புகாதவாறு தொப்பி அல்லது மப்ளர் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.