டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். மேலும், இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கம் இறுதியாக உடைக்கப்பட்டு விட்டாதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள ஒரு சமூக வலைதள பதிவில், "பாபா பவுக் நாக் ஜியின் கருணையினாலும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் கருணையினாலும், மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பாலும் சுரங்கத்துக்குள் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. விரைவில் தொழிலாளர் சகோதரர்கள் வெளியே கொண்டுவரப்படுவார்கள்" குறிப்பிட்டுள்ளார்.