சபரிமலை:சபரிமலை பாதுகாப்பு பணியில் இரண்டாம் கட்டமாக 1450 போலீசார் நேற்று பொறுப்பேற்றனர். போலீசாரின் உதவி பெற இலவச ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ., 15 முதல் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் முதற்கட்ட பணி நேற்று நிறைவு பெற்றதையடுத்து அவர்கள் சொந்த இடங்களுக்கு சென்றனர்.
இரண்டாம் கட்டமாக 10 டி.எஸ்.பி.,க்கள் 32 இன்ஸ்பெக்டர்கள், 125 எஸ்.ஐ.,க்கள், 1281 போலீசார் என 1450 பேர் நேற்று சன்னிதானத்தில் பொறுப்பேற்றனர்.
சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் நடந்த பணி விளக்க கூட்டத்தில் எஸ்.பி., கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ”பக்தர்கள் சிறந்த முறையில் தரிசனம் செய்யவும், ஒவ்வொரு பக்தரும் ஐயப்பனை தரிசித்ததை உறுதி செய்ய வேண்டியதும் போலீசாரின் கடமை.
வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் என்பதால் போலீசார் பொறுமையுடனும், மிகுந்த நிதானமாக சிறப்பாக செயல்பட வேண்டும்,” என்றார்.
ெஹல்ப்லைன் எண்
பக்தர்களுக்கு உதவ போலீஸ் ஹெல்ப்லைன் எண் 14432 அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த எண்ணில் அழைத்தால் பம்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து தகவல்களும் கிடைக்கும். விருச்சுவல் கியூ, பார்க்கிங், கூட்டம், பூஜை விபரங்கள், விபத்துக்கள், கூட்டம், உறவினர்களை பிரிந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த விவரங்களை பக்தர்கள் பெற முடியும்.
12 விளக்கு ஏற்பாடு
கார்த்திகை 12ம் தேதியை கேரளாவில் 12 விளக்கு என அழைக்கின்றனர். இந்த நாளில் கேரளாவில் உள்ள கோயில்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடக்கும். 12 விளக்குக்கு பிறகு தான் சபரிமலைக்கு ஏராளமான கேரள பக்தர்கள் வருகை தருகின்றனர். சபரிமலையில் நேற்று 12 விளக்கு நாளையொட்டி சன்னிதானத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்