வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டேராடூன்: உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் 17 வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது. சுரங்கப்பாதையை செங்குத்தாக தோண்டும் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் 5- 6 மீ., தூரத்தை கடந்தால் தொழிலாளர்களை நெருங்கி விடலாம் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யான் தண்டல்காவ்ன் இடையே மலையை குடைந்து நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று சுரங்கம் இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இடிபாடுகளை குடைய முதலில் பயன்படுத்தப்பட்ட துளையிடும் இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து, 25 டன் எடை உடைய அமெரிக்க துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரம் 154 அடி குடைந்த நிலையில், இயந்திரத்தின், ‛பிளேடு’கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உடைந்தன. இதனால், மீட்புப்பணி தடைபட்டது.
இதை தொடர்ந்து சுரங்கத்தை மேற்புறத்தில் இருந்து செங்குத்தாக தோண்டும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. அதேநேரம் சுரங்கத்தை கிடைமட்டமாக உபகரணங்கள் உதவியுடன் கைகளால் தோண்டி இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள 6 பேர் அடங்கிய ‛ ராட் ஹோல் மைனர்ஸ்’ என்ற நிபுணர் குழுவும் வந்து சேர்ந்தது. அவர்களும் பணியை துவக்கி உள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க கடந்த 12ம் தேதி துவங்கிய பணி 17 வது நாளாக எட்டி உள்ளது. சுரங்கத்தை தோண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்னும் 5-6 மீ தூரத்தை கடந்தால், தொழிலாளர்களை நெருங்கி விடலாம் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement