Maruti Suzuki Cars Price Hike: இந்திய கார் சந்தையில் இந்தாண்டு பண்டிகை காலங்களில் அதாவது நவராத்திரி, தீபாவளி காலகட்டங்களில் கடந்தாண்டு விட 19 சதவீதம் வரை அதிக கார் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்திய சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கார் தயாரிப்பு நிறுவனம், மாருதி சுசூகி (Maruti Suzuki). மாதாமாதம் இந்த நிறுவனம்தான் அதிக விற்பனையில் முன்னணியில் இருக்கும்.
மாருதி சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் இத்தனை ஆண்டுகாலம் நீடித்திருக்க, இதில் அனைத்து தரப்பினருக்குமான கார்கள் கிடைக்கும் என்பதும் ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக, சுமார் 3 லட்சம் ரூபாயில் தொடங்கி 29 லட்சம் ரூபாய் வரை (நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு மாறுபடலாம்) மாருதி சுசூகி நிறுவனம் கார்களை விற்பனை செய்து வருகின்றன. அதாவது, முதல் நிலை மாடலான ஆல்டோ முதல் மல்டி யூட்டிலிட்டி வாகனம் (MUV) இன்விக்டோ வரை மாருதி சுசூகி நிறுவனம் வைத்திருக்கிறது.
ஏன் விலை உயர்வு?
அந்த வகையில், மாருதி சுசூகி அந்த ஒழுங்குமுறை வெளிப்படுத்தல் விதிமுறைகளின்கீழ் மும்பை பங்குச் சந்தையில் (BSE) தாக்கல் செய்த அறிக்கையில்,”ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் அதிகரித்த பொருட்களின் விலைகளின் விளைவாக அதிகரித்த செலவு அழுத்தம் காரணமாக வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது. விலை குறைக்க அதிகபட்ச முயற்சிகளை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. செலவு மற்றும் விலை அதிகரிப்பை ஈடுகட்ட, அது கார்களின் விலையை உயர்த்தியே சந்தைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் எனவு விலை உயர்வு ஒவ்வொரு மாடல்களுக்கும் மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால், அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஆல்டோ (Alto), வேகன்-ஆர் (Wagon-R), பலேனோ (Baleno) போன்ற வாகனங்களின் விலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வாகனங்களின் விலை எவ்வளவு உயர்த்தப்படும் என்பதை நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. மாருதி நிறுவனத்தின் அனைத்து வாகனங்களின் விலையும் ஜனவரி முதல் உயரும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, ஒரு மாடல், ஒரே வகையிலான கார்கள் என்றில்லாமல் அனைத்து கார்களின் விலையும் உயர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டும் விலை உயர்ந்தது!
இந்த ஆண்டு ஏப்ரலில், மாருதி சுசூகி நிறுவனம் தனது அனைத்து மாடல்களின் விலையையும் உயர்த்தியது. அதற்கும் முன்னதாக, இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று, நிறுவனத்தின் வாகனங்களின் விலை 1.1 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இருப்பினும், இந்தாண்டு அக்டோபரில் (கடந்த மாதம்) மாருதி சுசூகி நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையாகி சாதனை படைத்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, கடந்த அக்டோபரில் மாருதி சுசூகி நிறுவனம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 217 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளது, சுமார் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தேவையும் அதிகரிப்பு
அதாவது கடந்த ஆண்டு (2022) அக்டோபரில் இந்நிறுவனம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 520 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. அதே நேரத்தில், அக்டோபர் 2023 இல், நிறுவனத்தின் வாகனங்களுக்கான உள்நாட்டு தேவையும் 1 லட்சத்து 77 ஆயிரத்து 266 யூனிட்டுகளை எட்டியது. இது இன்றுவரை நிறுவனத்திற்கு அதிக தேவையான எண்ணிகையாக உள்ளது. கடந்த ஆண்டு (2022) இந்நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 72 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வளர்ச்சியும் ஆண்டுக்கு 21 சதவீதமாக உள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த நிறுவனமும்…
மாருதி சுசூகி நிறுவனம் மட்டுமின்றி, ஜெர்மன் நாட்டின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான Audi, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தனது வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக முன்னர் அறிவித்திருந்தது. உள்ளீட்டு செயல்பாட்டு செலவுகள் அதிகரித்து வருவதால் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. நிறுவனத்தின் அனைத்து மாடல்கள் மற்றும் வரம்புகளின் விலையில் இந்த உயர்வு வரும் ஜனவரி முதல் செய்யப்படும் என்று Audi India தெரிவித்திருந்தது.