பெங்களூரு: கொரோனா தொற்றுக்குப் பின், சீனாவில் சுவாசப்பையை பாதிக்கும் தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி, கர்நாடகா கொரோனா தொழில்நுட்ப கமிட்டி முன்னெச்சரிக்கை வழிகாட்டு விதிகளை நேற்று (நவ., 28) வெளியிட்டது.
இதுதொடர்பாக சுகாதாரம், குடும்ப நலத்துறை கமிஷனர் ரண்தீப் கூறியதாவது: சீனாவில் 2019ல் கொரோனா தொற்று தென்பட்டது. இது பற்றி, சீனா தகவல் தெரிவிக்காததால், உலகம் முழுதும் பரவியது. ஆண்டுக்கணக்கில் போராடி, தொற்றை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது குளிர்காலத்தில், சீனாவில் சுவாச பிரச்னையால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சிறார்களுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படுகிறது.
பலரும் மூச்சுத்திணறல் பிரச்னையால், மருத்துவமனையில் சேருவதால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மீண்டும் தொற்று பீதி ஏற்பட்டுள்ளது. இதைத் தீவிரமாக கருதும் மத்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி கர்நாடக அரசும், முன்னெச்சரிக்கையில் இறங்கியுள்ளது. கொரோனா தொழில்நுட்ப கமிட்டி, ஆலோசனை கூட்டம் நடந்தது. விதிகளை செயல்படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்துக்கு பின், நேற்றிரவு ரன்தீப் வெளியிட்ட அறிக்கை:
* தற்போது பரவி வரும் தொற்று, தும்மல், இருமல், கண்ணீர் மூலம் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு பரவி வருகிறது
* பாதிப்பு ஏற்படும் பச்சிளம் குழந்தைகள், முதியோர், நீண்ட நாட்களாக சிகிச்சை பெறுவோர், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்
* இருமல், தும்மல் வரும்போது, கர்ச்சீப் மூலம் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்
* கைகளை சோப் மூலம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
* பாதிப்பு ஏற்பட்டோர், மக்கள் அதிகம் மிகுந்த இடத்துக்கு செல்வதை தவிர்க்கவும். தேவையெனில் முக கவசம் அணிந்து செல்லவும்
* குறைந்தபட்ச இடைவெளி கடைபிடிக்கவும்
* நன்றாக துாங்கி, நல்ல உடல் நலனை பேணி காக்கவும்
* நிறைய தண்ணீர், சத்துணவு சாப்பிடுங்கள்
* பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்கவும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா தொற்று பரவலின்போது அறிவிக்கப்பட்ட விதிகளை கடைபிடிக்கும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், மருந்துகள், முழு உடல் கவச உடை, முக கவசங்கள், ஆக்சிஜன், மருத்துவ ஆய்வகங்கள், ஆம்புலன்ஸ்கள், படுக்கைகள் தயார் நிலையில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
முக கவசம் அணியுங்கள்!
கர்நாடகா சுகாதார துறை அறிக்கை:
* பாதிப்பு ஏற்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள்
* பணிக்கோ, பள்ளிக்கோ செல்ல வேண்டாம். முகக்கவசம் அணிந்து கொண்டே இருங்கள்
* குறைந்தபட்சம் 7 நாட்கள் வரை, மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம்.
* குணமடைந்து 24 மணி நேரம் வரை தொடர்பு இருக்க வேண்டாம்
* காய்ச்சல், குளிர்ச்சி, உணர்வு இன்மை, உடல் வலி, சளி, வரட்டு இருமல் உள்ளிட்டவை பாதிப்பின் அறிகுறிகள்
* பலவீனமான மக்கள், மூன்று வாரங்கள் வரை பாதிக்கப்படுவர்
* சுயமாக மருந்து சாப்பிடுவதை தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்