ஆதித்யா-எல்1 அப்டேட் | சூரியக் காற்று அளவீடுப் பணியை தொடங்கியது 'ஸ்விஸ்' கருவி – இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியக் காற்றில் உள்ள துகள்களின் அயனிகளை அளவிடும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பியது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுகிறது. அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ‘ஆதித்யா’ மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதித்யா எல்1 தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரியக் காற்றில் உள்ள துகள்கள் குறித்த பரிசோத்னையை ஆஸ்பெக்ஸ் பேலோட் தொடங்கியுள்ளது. அது தனது பணியை இயல்பாகச் செய்து கொண்டிருக்கிறது. ஆஸ்பெக்ஸில் சூரியக் காற்று அயனிகளை அறியும் ஸ்பெக்ட்ரோமீட்டர் Solar wind Ion Spectrometer (Swis) மற்றும் ஸ்ட்பெஸ் -SupraThermal and Energetic Particle Spectrometer (Steps) என இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ட்பெஸ் தனது பணியை செப்டம்பர் 10ல் தொடங்கியது. ஸ்விஸ் கருவி நவம்பர் 2ல் தனது வேலையைத் தொடங்கியது. ஸ்விஸ் கருவியானது சூரியக் காற்றில் உள்ள அயானிகளை குறிப்பாக புரோட்டான் மற்றும் ஆல்பா துகள்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. அது அனுப்பிய மாதிரியா ஹிஸ்டோகிராமின்படி H+ புரோட்டான், He2+ ஹீலியம் ஆகியன சூரியக் காற்றில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்விஸ் கருவியானது சூரியக் காற்றில் உள்ள ஆல்பா, புரோட்டான் விகிதாச்சார வித்தியாசத்தை அறிந்துள்ளது. இதன்மூலம் சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியான எல்1-ல் கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் (சிஎம்இ) ஏற்படுவதற்கான மறைமுக தகவலை அளிக்கும் திறன் தன்வசம் இருப்பதை அக்கருவி உறுதி செய்துள்ளது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் இஸ்ரோவின் இன்னொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கரோனா மாஸ் எஜெக்‌ஷன் பற்றிய தகவல் விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.