வாஷிங்டன் அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை கடத்தி, அடித்து துன்புறுத்திய வழக்கில், சக இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆர்.சத்தரு என்பவர் வசித்து வருகிறார்.
இவர், சக இந்தியர்களான ஸ்ரவன் வர்மா, நிகில் வர்மா பென்மட்சா ஆகியோருடன் சேர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை, ஏப்ரல் மாதத்தில் இருந்து, தனக்கு சொந்தமான மூன்று வீடுகளில் வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு கழிப்பறை வசதி கூட செய்து கொடுக்காமல், இந்த மூன்று பேரும் இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டை போன்றவற்றால் அடித்து துன்புறுத்தி உள்ளனர். இது குறித்து, பக்கத்து வீட்டுக்காரர் போலீசுக்கு தகவல் அளித்தார்.
இதன்படி, செயின்ட் சார்ல்ஸ் கவுண்டி பகுதி யில் உள்ள வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்ற போலீசார், சித்ரவதைக்கு உள்ளான வாலிபரை மீட்டனர். மேலும், வெங்கடேஷ் ஆர்.சத்தரு, ஸ்ரவன் வர்மா, நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது கடத்தல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement