பெங்களூரு : பெங்களூரில் நேற்று ஒரே நாளில், அரசு மற்றும் தனியார் என, 60 பள்ளிகளுக்கு, ‘இ – மெயில்’ வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த பெற்றோர் அலறி அடித்து பள்ளிக்கு சென்று, தங்களது பிள்ளைகளை அழைத்து சென்றனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில், அது வதந்தி என்பது தெரியவந்தது.
பெங்களூரு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், 2010ல் குண்டு வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். அடுத்து, 2013ல் மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில், 13 பேர் காயம் அடைந்தனர்.
அதன்பின், அவ்வப்போது பெங்களூருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. குறிப்பாக பள்ளிகளை குறி வைத்து, மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கே.ஆர்.புரம், எலஹங்கா உட்பட 30 இடங்களில், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு ராஜாஜி நகர் பசவேஸ்வரா நகரில் என்.ஏ.எப்.எல்., என்ற பெயரில் இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அந்த பள்ளியின் இ – மெயில் முகவரிக்கு, முஜாகிதீன் என்ற பெயரில் இருந்து, ஒரு கடிதம் வந்தது.
அதில், ‘உங்கள் பள்ளியின் மைதானங்களில் வெடிகுண்டு வைத்து உள்ளோம். நீங்கள் அல்லாவுக்கு எதிராக இருந்தால் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் கொல்வோம். எங்களின் அடிமைகளாக நீங்கள் மாற வேண்டும். இந்தியா முழுதும் இஸ்லாமியத்தை பரப்புவோம்.
அனைவரும் இஸ்லாமுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் சாக தயாராக இருக்க வேண்டும். உங்கள் தலை, விரல்களை வெட்டுவோம்’ எனக் கூறப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகிகள், பசவேஸ்வரா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து, சோதனை நடத்தினர்.
துணை முதல்வர்
இதற்கிடையில், சதாசிவநகரில் உள்ள நீவ் என்ற தனியார் பள்ளியின், இ – மெயிலுக்கும் இதே வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்தனர். அந்த பள்ளி, துணை முதல்வர் சிவகுமார் வீட்டின் அருகே அமைந்திருப்பதால், அவரும் பள்ளிக்கு சென்றார். போலீசாரிடம் தகவலை கேட்டறிந்தார்.
இதன்பின்னர் எலஹங்கா, ஆனேக்கல், சிங்கேன அக்ரஹாரா, பொம்மசந்திரா, பன்னரகட்டா, அம்ருதஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 40 தனியார் பள்ளிகளுக்கும், நாகதேவனஹள்ளி, சானதுருவனஹள்ளியில் செயல்பட்டு வரும் இரண்டு அரசு பள்ளிகளுக்கும், அந்த மிரட்டல், ‘இ – மெயில்’ சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகங்கள், ‘உங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல வாருங்கள்’ என்று, பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பின. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறியடித்து கொண்டு, பள்ளிகளுக்கு விரைந்தனர். தங்கள் பிள்ளைகளை வாகனங்களில் அழைத்து சென்றனர்.
இதனால், பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் பரபரப்பும் பீதியும் நிலவியது. மேலும், பல சாலைகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. பெரும்பாலான மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பயத்துடன், பெற்றோருடன் வீட்டுக்கு சென்றனர்.
ஒரு சில மாணவர்களுக்கு மட்டும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி தெரிந்தது.
அரசு மற்றும் தனியார் என மொத்தம் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டோ, சந்தேகத்திற்கு இடமான பொருட்களோ சிக்கவில்லை.
இதனால், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரிந்தது. ஆனாலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
பாதுகாப்பு
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, டி.ஜி.பி., அலோக் மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ‘வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அலோக் மோகன் தலைமையில் டி.ஜி.பி., அலுவலகத்தில், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, கூடுதல் கமிஷனர்கள், எட்டு மண்டலங்களின் துணை போலீஸ் கமிஷனர்கள் கலந்து கொண்டனர். இதில், நகரின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையில் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ”பெங்களூரில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி, தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளேன். பள்ளிகள், கோவில்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தி உள்ளேன்,” என்றார்.
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ”என் வீட்டின் அருகே உள்ள பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளிக்கு சென்று, போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்து தகவல் பெற்றேன். விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது,” என்றார்.
பயங்கரவாத பின்னணி
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் பின்னணியில், பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டியில், ”பள்ளிகளுக்கு வந்துள்ளது ஒரே வெடிகுண்டு மிரட்டல் கடிதம் தான். அந்த கடிதத்தில், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது.
”அல்லாவுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. அனைவரும் இஸ்லாமுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் சாக தயாராக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை அரசு தீவிரமாக எடுத்து கொண்டு, உரிய விசாரணை நடத்த வேண்டும். பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்