மாண்டியா : ம.ஜ.த., தலைவர்கள் உத்தரவின்படி, லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட, முன்னாள் எம்.பி., புட்டராஜு தயாராகி வருகிறார்.
அடுத்த ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஹாசன், மாண்டியா, துமகூரு, கோலார் ஆகிய நான்கு தொகுதிகளை, ம.ஜ.த.,வுக்கு ஒதுக்க, பா.ஜ., மேலிடம் திட்டம் வைத்துள்ளது.
இந்த மாத இறுதியில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கவுள்ளது. மாண்டியா தொகுதியின் தற்போதைய எம்.பி., சுமலதா, கடந்த தேர்தலில் பா.ஜ., ஆதரவுடன், சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இவருக்கும், ம.ஜ.த., கட்சிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வில் இணைந்து, மாண்டியாவில் போட்டியிட, சுமலதா திட்டம் வைத்துள்ளார். ஆனால், அவருக்கு பெங்களூரு வடக்கு தொகுதியை ஒதுக்க, பா.ஜ., மேலிடம் நினைத்துள்ளது. ஆனால், ‘எக்காரணம் கொண்டும், மாண்டியா தொகுதியை விட்டு தர மாட்டேன்’ என, சுமலதா கூறி வருகிறார்.
இந்நிலையில், மாண்டியா தொகுதியில் போட்டியிட தயாராகும்படி, முன்னாள் எம்.பி., புட்டராஜுக்கு, ம.ஜ.த., மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அவர் இப்போது இருந்தே, தொகுதியை சுற்றி வர ஆரம்பித்துள்ளார்.
ம.ஜ.த., தொண்டர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடத்துகிறார். மாண்டியா தொகுதி தனக்கு கிடைக்கா விட்டால், மீண்டும் சுயேச்சையாக போட்டியிட, சுமலதா முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்