பெங்களூரு : ”நடப்பாண்டு 4,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது,” என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெண்கள், குழந்தைகள் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் துறை சார்பில் பெங்களூரு கன்டீரவா உள் விளையாட்டு அரங்கில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நடந்தது.
விழாவை துவக்கி வைத்து, முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
நடப்பாண்டு ஏழு மாவட்டங்களில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக, தலா 2 கோடி ரூபாயில், 10 உறைவிடப் பள்ளிகள் கட்ட, திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் கல்வி, மருத்துவம், மறுவாழ்வு, மூத்த குடிமக்கள் நலனுக்காக என 284.27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இறந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை, 50,000 ரூபாயில் இருந்த 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 13 லட்சத்து 24 ஆயிரத்து 205 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் சமூகத்துக்கு சுமையல்ல.சமீப காலமாக மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும் ஈடு இணையற்ற சாதனைகள் படைத்து வருகின்றனர்.
இதனால் சமுதாயத்துக்கு சுமை என்ற உணர்வு அகற்றப்பட வேண்டும். அனைவரையும் போன்று அவர்களுக்கும் வேலை, வாழ்க்கைக்கான அனைத்து வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைத்துஉள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்குவது அரசின் கடமை. நடப்பாண்டு 4,000 மாற்றத்திறனாளிகளுக்கு, மோட்டார் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.
கண் பார்வையற்ற, 40 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட மக்கள் குறை தீர்வு நிகழ்ச்சிக்கு வந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள், வேலை வாய்ப்பு, கல்வி, வாகனங்கள் வாங்குவதற்கு உதவி கோரி உள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், மனநலம் குன்றியவர்கள் வலிமையானவர்கள். பட்ஜெட்டில் அவருக்காக பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
– லட்சுமி ஹெப்பால்கர்,
அமைச்சர், மகளிர், குழந்தைகள் நலத்துறை
பெங்களூரின் குடிநீருக்கு தேவையான தண்ணீர், கே.ஆர்.எஸ்., அணையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. காவிரி திட்டத்தின், ஐந்தாம் கட்ட பணிகள் விரைவில் முடியும். தற்போது பெங்களூருக்கு தேவையான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. எங்காவது குடிநீர் பிரச்னை இருந்தால், எங்களின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.
– என்.ஜெயராம்,
தலைவர், பெங்களூரு குடிநீர் வாரியம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்