பெங்களூரு : ”ஐந்து ஆண்டுகளுக்கும் நமது பிரதிநிதியாக யார் வர வேண்டும் என்பதை சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும். எனவே அனைவரும் ஓட்டுப்போடுவது மிகவும் அவசியம்,” என, கர்நாடகா கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் குமார், மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், பெங்களூரு அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில், இரண்டாவது தமிழ் புத்தக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில், இரண்டாவது நாளான நேற்று, ‘ஜனநாயகமும், தேர்தலும்’ என்ற தலைப்பில் உரைவீச்சு நடந்தது.
வளர்ச்சி பாதையில் நாடு
தலைமை வகித்து, ‘அன்வயா அறக்கட்டளை’ நிறுவனர் சம்பத் ராமானுஜம் பேசுகையில், ”ஜனநாயகத்தில், சட்டத்தை மதித்து நடப்பது, பாரபட்சமின்றி தேர்தல் கமிஷன் நேர்மையாக செயல்படுவது, ஊடகத்தை சுதந்திரமாக செயல்பட விடுவது ஆகிய மூன்றும் சிறப்பாக செயல்பட்டால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்,” என்றார்.
கர்நாடகா கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் குமார் பேசியதாவது:
நான், 13 ஆண்டுகளாக கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளேன். எந்த நிகழ்ச்சிக்கும் சென்றாலும் மாணவர்கள் இருப்பதை விரும்புவேன். மாணவர்கள் தான் எதிர்காலம்.
எட்டாம் வகுப்பு முதலே சமூக அறிவியல், வரலாறு புத்தகங்களில், ஜனநாயகம், தேர்தல் தொடர்பாக பாடங்கள் கற்பிக்கப்படும். உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு இந்தியா.
மக்கள், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுப்பது தான் ஜனநாயகம். நம் நாட்டில், மக்கள் தான் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் தான் தங்கள் பிரதிநிதியாக யார் வர வேண்டும் என்பதை தேர்வு செய்கின்றனர்.
பெங்களூரில் 45 முதல், 50 சதவீதம் மக்கள் மட்டுமே ஓட்டுப்போடுகின்றனர். இதில், 20 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர்.
தேர்தல்கள்
பாரபட்சமின்றி, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி முடிப்பது தேர்தல் கமிஷன் பணியாகும். சமீபத்தில் முடிந்த சட்டசபை தேர்தல் எந்த பிரச்னை இன்றி முடிந்தது. அடுத்தடுத்து, எம்.எல்.சி., லோக்சபா, ராஜ்யசபா ஆகிய தேர்தல்கள் நடக்க உள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கும் யார் நமது பிரதிநிதியாக வர வேண்டும் என்பதை சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும். எனவே அனைவரும் ஓட்டுப்போடுவது மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர்பேசினார்.
மாலையில், டி.ஆர்.டி.ஓ., ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘கையருகே கிரீடம்’ என்ற புத்தகத்தை, தமிழக முன்னாள் தலைமை பொது தபால் தலைவர் தியோடர் பாஸ்கரன் வெளியிட்டார். தியாகராஜநகர் எஸ்.வி.சி.கே., உயர்நிலைப் பள்ளி தலைவர் லட்சுமிபதி, ஹெச்.ஏ.எல்., தலைமை மேலாளர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விண்மீன் விளையாட்டு விளையாடியது மகிழ்ச்சி. இதுவரை இதுபோன்ற விளையாட்டு விளையாடியது இல்லை. பார்க்க சுலபமாக இருக்கிறது. விளையாடுவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனாலும் பிடித்துள்ளது.
சர்வேந்திரா,
பள்ளி மாணவர்,
எலக்ட்ரானிக் சிட்டி
வகை வகையாக புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகங்கள், புதிர் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கிறது. எந்தெந்த வகையான புத்தகங்கள் கிடைக்கும் என்பதை வெளியில் தகவல் இருந்தால் நன்றாக இருக்கும்.
ரஞ்ஜினி பிரியா,
மென்பொறியாளர்,
ஒயிட்பீல்டு
தாமரை பதிப்பக புத்தகங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. பச்சைப்புடவைக்காரி புத்தகம் நான்கு பாகங்களும் வாங்கியது மகிழ்ச்சி. பிள்ளைகள், டிவி, மொபைல் போன் பார்ப்பதை தவிர்த்து, புத்தகங்கள் படிப்பதை கற்று கொடுக்கலாம்.
அலமேலு,
காக்ஸ்டவுன்
மருத்துவம், ஆன்மிகம் உட்பட நல்ல நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன. அறிவியல், பொருளாதார புத்தகங்கள் தேவை. பெங்களூரில் நமக்கு தேவையான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது மகிழ்ச்சி.
பாபு,
தனியார் நிறுவன ஊழியர்,
தொட்ட பானஸ்வாடி
படிக்க கூடிய புத்தகங்கள் நிறைய உள்ளன. விருதுநகர், பெங்களூரு என 40 ஆண்டுகளாக தினமலர் படிக்கின்றோம். முதல் முறையாக புத்தக திருவிழாவுக்கு வந்துள்ளோம். நன்றாகவே உள்ளது.
நித்யானந்தம்
சந்திரிகா,
கல்யாண்நகர்
பரிசுகள் பெற்ற மாணவர்கள்
கல்லுாரி மாணவர்களுக்கான மொழித்திறன் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது.வினாடி வினா: முதல் பரிசு: விஸ்வசேத்தனா பட்டய கல்லுாரி மாணவியர் நாகஸ்ரீ, மதுமிதா, பிந்து, சேத்தனா: இரண்டாவது பரிசு: மஹாராணி மகளிர் அறிவியல் கல்லுாரி மாணவியர் ஷாலினி முருகன், ரித்திகா, ஸ்வேதா, கவுசல்யா; மூன்றாம் பரிசு: ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., முதல் நிலை பட்டய கல்லுாரி மாணவியர் நிவேதா, சிவசங்கரி, ஆனந்தன், டோனி ரேமன்முதல் பரிசு: ஜிகினி விஸ்வசேத்தனா பட்டய கல்லுாரி மாணவர் முரளி; இரண்டாவது பரிசு: கோரமங்களா செயின்ட் பிரான்சிஸ் கல்லுாரி மாணவர் தேவிபாலா; மூன்றாவது பரிசு: ஜிகினி விஸ்வசேத்தனா பட்டய கல்லுாரி மாணவர் நந்தா.முதல் பரிசு: மஹாராணி கிளஸ்டர் பல்கலைக்கழக மாணவி கீர்த்தனா; இரண்டாவது பரிசு: பி.எம்.எஸ்., மகளிர் கல்லுாரி மாணவி கீர்த்திகா; மூன்றாவது பரிசு: மஹாராணி கிளஸ்டர் பல்கலைக்கழக மாணவி எர்னஸ்ட்.முதல் பரிசு: ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கல்லுாரி மாணவர்கள் யுவஸ்ரீ, ஜெயந்தி, பவித்ரா, காவியா, வெற்றிவேல், அரவிந்த்; இரண்டாவது பரிசு: விஸ்வசேத்தனா பட்டய கல்லுாரி மாணவர்கள் ரக் ஷிதா, சுதா ராணி, வித்யா, வேதா, ஜெயசாரா, பிரியங்கா; மூன்றாவது பரிசு: செயின்ட் பிரான்சிஸ் கல்லுாரி மாணவர்கள் ப்ரீத்தி, சில் ஆகாஷ், பிரின்சிலின் பிரீத்தா, ஷரோன் ஜெபியா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்