◾ இலங்கையில் இயலாமையுடைய நபர்களுக்கு நீதி கிடைக்காமையால், எதிர்காலத்தில் எவ்வித பாகுபாடும் இன்றி அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுப்போம் – இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பு
• அடுத்த தேசிய தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்கு தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டுக்கள் (Tactile ballot paper) – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதியளிப்பு
• இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இயலாமையுடைய சமூகத்துக்கு ஏற்ற வகையில் பஸ் வண்டிகளைப் பெற்றுக்கொள்வது குறித்த யோசனை பாராளுமன்றத்தில்
• பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களுக்குச் செல்வதற்கான வசதிகள் இல்லாததால் இயலாமையுடைய சமூகத்தினருக்குக் பெரும் அநீதி – இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி சுட்டிக்காட்டு
இயலாமையுடைய நபர்களுக்காக இலங்கைக்குள் இதுவரை நீதி கிடைக்கப்பெறவில்லையென்றும், இது நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை என்பதுடன், எவ்வித கட்சி பேதமும் இன்றி இது தொடர்பில் எதிர்காலத்தில் குரல்கொடுக்கவிருப்பதாகவும் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இயலாமையுடைய நபர்களுக்கான சர்வதேச தினம் டிசம்பர் 03ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (01) பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.
இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி உள்ளிட்ட சில தரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி கடந்த டிசம்பர் மாதம் இந்த ஒன்றியைத்தை உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்ட ஒன்றியத்தின் தலைவர், இயலாமையுடைய நபர்களின் உரிமைகளுக்காகப் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் தாம் குரல்கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் 600 பஸ்களை கொள்வனவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதால், இயலாமையுடைய நபர்களுக்கான சில பஸ்களை கொள்வனவு செய்து முன்னோடித் திட்டமொன்றை முன்னெடுப்பது பற்றிய யோசனையொன்றை எதிர்வரும் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்மொழியவிருப்பதாக கௌரவ அழகப்பெரும தெரிவித்தார். இந்த யோசனையைக் வந்த தேசிய ஜனநாயக நிறுவனத்திற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இயலாமையுடைய நபர்களுக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தில் இலங்கை 2006ஆம் ஆண்டு கைச்சாத்திட்டபோதிலும், அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நிலையில் கொள்கை வகுப்பில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இயலாமையுடைய நபர்களுக்காக அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே தமது ஒன்றியத்தின் நம்பிக்கை என்றும் தெரிவித்தார்.
இயலாமையுடைய சமூகத்தின் தேவைகள் பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்காகக் குரல்கொடுப்பது மற்றும் அந்தந்த நிறுவனங்களை ஒன்றுதிரட்டி ஒன்றிணைந்த குரலாக மாற்றுவது தமது ஒன்றியத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க குறிப்பிடுகையில், தேசிய ரீதியில் நடைபெறும் அடுத்த தேர்தலில் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை (Tactile ballot paper) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தேவைகள் மற்றும் இயலாமையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடிய வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ரத்னாயக்க தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே குறிப்பிடுகையில், நாட்டின் சனத்தொகையில் 8.7%, அதாவது கிட்டத்தட்ட 16 இலட்சம் பேர் இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகமாகக் காணப்படுகிறது. அத்தரப்பினருக்காகக் குரல்கொடுக்க செப்டம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்ற ஒன்றியமொன்றை அமைக்கக் கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார். இந்த நாட்டில் பல பொது இடங்களில் வசதிகள் இல்லாததால், இயலாமையுடைய நபர்களுக்கு பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நபர்கள் பாரிய அளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவது மற்றும் அவர்களின் கல்விக்குக் காணப்படும் தடைகள் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார்.
எனவே இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை சட்டரீதியாக அமுல்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அவர்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் இச்சமூகத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இயலாமையுடைய நபர்களுக்கான உரிமைகளை மதிக்கும் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஊடகங்களின் பொறுப்பும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் விசேட சித்தியைப்பெற்று விஞ்ஞானத் துறையில் உயர்கல்வியைத் தொடர்ந்துவரும் விழிப்புலனாற்ற முதலாவது மாணவர் என்ற பெருமையைப் பெற்ற பிரையன் கிங்ஸ்டன் இங்கு கருத்துத் தெரிவித்ததுடன், தான் உள்ளிட்ட இயலாமையுடைய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர் முன்னிலைப்படுத்தினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, பிரெயில் வசதியுடன் தயாரித்துள்ள தனது அறிமுக அட்டையை (visiting Card) மஒன்றியத்தின் தலைவர் மற்றும் உயர்கல்வியைத் தொடரும் மாணவன் பிரையன் கிங்ஸ்டன் ஆகியோரிடம் வழங்கினார்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுல்ளே, குறித்த ஒன்றியத்தின் உப தலைவர் கௌரவ ரோஹினி குமார விஜேரத்ன, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ கே.பி.எஸ்.குமாரசிறி, கௌரவ உதயன கிரிந்திகொட, பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, என்டிஐ நிறுவனத்தின் பணிப்பாளர் ஷியாமா கல்காது உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு USAID நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பு மற்றும் NDI நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.