கொல்கத்தா: ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் புதன்கிழமை (டிச.6) டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அது குறித்த தகவல் தனக்கு கிடைக்கப்பெறவில்லை என மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
“புதன் அன்று நடைபெற உள்ள இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் குறித்து எனக்கு தெரியாது. கூட்டம் குறித்த தகவலை யாரும் எனக்கு சொல்லவில்லை. எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. உரிய தகவல் இல்லை. டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி உள்ளது. நான் முன்கூட்டியே அதனை திட்டமிட்டுவிட்டேன். இப்போது எனக்கு அழைப்பு கொடுத்தாலும் நான் எப்படி எனது திட்டத்தை மாற்றுவது. கூட்டம் குறித்து என்னிடம் முன்கூட்டியே சொல்லி இருந்தால் நிச்சயம் நான் சென்றிருப்பேன்” என பத்திரிகையாளர்களிடம் மம்தா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இவற்றின் தாக்கம் குறித்து எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசிக்க உள்ளனர். இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி வீட்டில் வரும் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இண்டியா கூட்டணி: மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்காக பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரால் உருவாக்கப்பட்டது ‘இண்டியா’ கூட்டணி. நாடு முழுவதிலும் உள்ள சுமார் 28 எதிர்க்கட்சிகள் இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் இவர்களுடைய ஒரே நோக்கம்.