கர்நாடகா சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், பெலகாவியில் இன்று துவங்குகிறது. வரும் 15ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கும் கூட்டத் தொடருக்காக, பெங்களூரில் இருந்து மாநில நிர்வாகம், பெலகாவிக்கு இடம் பெயர்ந்து உள்ளது.
பெலகாவி : கர்நாடக சட்டசபை, ஆண்டிற்கு நான்கு முறை கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டு கூட்டம் ஜனவரி மாதமும், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமும், மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை மாதமும், குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதமும் நடப்பது வழக்கம்.
இதில் குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் வடமாவட்ட பிரச்னைகளை விவாதிக்கும் வகையில், பெலகாவி சுவர்ண சவுதாவில் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ல் துவங்கி 15 ம் தேதி வரை நடக்கும் என்று, கடந்த மாதம் சபாநாயகர் காதர் அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தொடர் நடத்தும் ஏற்பாடுகளை, பெலகாவி மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை 11:00 மணிக்கு குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15ம் தேதி வரை 10 நாட்கள் கூட்டம் நடக்கிறது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதால், அரசு இயந்திரம் பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பல குளறுபடிகள்
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பெலகாவிக்கு சென்று உள்ளனர். அவர்கள் தங்குவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுத்து உள்ளது.
இதற்கிடையில், கூட்டத்தொடர் துவங்கியதும் அரசை வறுத்தெடுக்க, எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.
மாநிலத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. ஆனால் வறட்சி பணிகளை மேற்கொள்ள அலட்சியம் காட்டும் அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறது. காங்கிரஸ் அரசு தேர்தலுக்கு முன்பு ஐந்து வாக்குறுதிகள் அளித்தது. அதில் நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர். இதில் சக்தி திட்டம் எனும் இலவச பயண திட்டத்தில், மட்டும் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவி தொகை வழங்கும் கிரஹ லட்சுமி திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன. பெரும்பாலான பெண்களுக்கு உதவி தொகை சரியாக கிடைப்பது இல்லை. அன்னபாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ, அரிசி தருவதாக கூறினர். அதில் 5 கிலோ அரிசி தான் வழங்குகின்றனர். மீதம் 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்கின்றனர். அந்த பணமும் சரியாக வருவது இல்லை என்று பயனர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அமைச்சர்கள்
அதிகாரிகள் இடமாற்றத்தில் பணம் வாங்குவதாக, அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. சபாநாயகர் பதவியை அவமதிக்கும் வகையில், அமைச்சர் ஜமீர் அகமதுகான் பேசியுள்ளார். இது உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்பி, அரசை கதிகலங்க வைக்க, பா.ஜ., – ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
கடந்த முறை பெங்களூரில் கூட்டத்தொடர் நடந்த போது, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் எதிர்க்கட்சி தலைவர் இன்றி கூட்டத்திற்கு சென்றனர். இதை வைத்து காங்கிரஸ் கிண்டல் செய்தது. ஆனால், இம்முறை எதிர்க்கட்சி தலைவருடன் கூட்டத்தொடருக்கு செல்வதால், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் புத்துணர்ச்சி அடைந்து உள்ளனர். தங்கள் தொகுதிக்கு நிதி ஒதுக்காதது குறித்து, அரசிடம் கேள்வி கேட்க உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க, அமைச்சர்களுக்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதனால் கூட்டத்தொடர் நடக்கும் 10 நாட்களும், அனல் பறக்கும் விவாதம் நடக்க போவது உறுதியாகி உள்ளது. இம்முறையாவது வடமாவட்ட பிரச்னைகள் குறித்து அதிகம் விவாதிக்க வேண்டும் என்று, வடமாவட்ட எம்.எல்.ஏ.,க்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபாநாயகர் ஆய்வு
விவசாய பம்ப்செட்டுகளுக்கு ஏழு மணி நேரம் மின்சாரம் வழங்க கோரி விவசாயிகளும், பஞ்சமசாலி சமூகத்தினருக்கு 2ஏ இடஒதுக்கீடு கேட்டு லிங்காயத் சமூகத்தினரும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்து உள்ளனர். இதற்காக, சுவர்ண சவுதா அருகே தனி இடமும் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது.
சுவர்ண விதான சவுதாவை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. போலீசார், தங்க கூடாரங்களும் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 6:00 மணி முதல் 15ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதை ஒட்டி, பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் சபாநாயகர் காதர், மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் அறைகளில் ஆய்வு செய்தனர். மைக்குகளில் சரியாக வேலை செய்கிறதா என்றும் சரிபார்த்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்