இம்பால் மணிப்பூரில் மியான்மர் எல்லையை ஒட்டிய கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் துவங்கிய கலவரம், ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்தது. இதில் 180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் இங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், அவ்வப்போது போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நம் அண்டை நாடான மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தெங்நவ்பால் மாவட்டத்தில் உள்ள லெய்து கிராமத்தில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். தகவலறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சென்ற போது, யாரும் அங்கு காணப்படவில்லை. பின்னர், 13 உடல்கள் கைப்பற்றப்பட்டன.
அப்பகுதியில் தங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும், தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை படை இயக்கத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 13 பேர் கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இறந்தவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த மக்கள் விடுதலை படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இருப்பினும், அப்பகுதி யில் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement