Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்… புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா?

Doctor Vikatan: 50 வயதுக்கு மேற்பட்ட சில ஆண்களுக்கு நுரையீரலுக்குச் செல்லும் வால்வில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் வர என்ன காரணம்? உடல்பருமனா அல்லது புகை, பாக்கு போன்றவற்றை உபயோகப்படுத்துவதன் விளைவால் இப்படி ஏற்படுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

திருப்பதி

நுரையீரலில் வால்வு போன்ற அமைப்பு ஏதும் கிடையாது. நுரையீரலில் இருப்பது வெறும் காற்றுக்குழாய்கள்தான்.  காற்று உள்ளே வந்து வெளியே போகும் அந்தக் குழாயில் வரும் பிரச்னைதான் வீஸிங் ஏற்படக் காரணமாகிறது.   

சிறுவயதில் ஆஸ்துமா பாதித்திருந்தால் பிற்காலத்தில் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கலாம். பரம்பரைக் காரணங்களால் இந்த பாதிப்பு தொடரலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் தூசு அலர்ஜி அல்லது ஒவ்வாத வாசனையின் காரணமாக ஏற்படும் ரியாக்ஷனில் காற்றுக்குழாய் சுருங்கிவிடுகிறது. அதனால் மூச்சு விடுவது சிரமமாகிறது. இருமல், சளி ஏற்படுகிறது. இதைத்தான் நாம் ஆஸ்துமா என்கிறோம். 

ஆஸ்துமா

அதுவே 50 வயதுக்குப் பிறகு நுரையீரலின் திறனும் இயல்பாகவே சற்று குறையத் தொடங்கும். உடல் பருமன் பிரச்னையும் சேரும்போது நுரையீரலின் செயல்திறன் மேலும் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம்.

புகை பிடிக்கும்போதும் இதே விளைவுதான் நிகழும். புகைப்பழக்கத்தால் காற்றுக்குழாய் பாதிக்கப்பட்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. புகைப்பழக்கம் என்பது நுரையீரலின் அமைப்பிலும்  பாதிப்பை ஏற்படுத்துவதால் அதன் அடிப்படை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மற்றபடி பாக்கு போடுவதால் நுரையீரல் பாதிக்கப்பட நேரடியான வாய்ப்புகள் இல்லை. 

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் இருந்தால் முதலில் அதை நிறுத்த வேண்டும். முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வீஸிங் பாதிப்பு இருக்கிறதா, நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறதா, வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என மருத்துவர் ஆராய்வார். அதற்கேற்ப மருந்துகள், இன்ஹேலர் உபயோகம் உள்ளிட்ட சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.