தாய்லாந்து பணயக் கைதிகள் 6 பேரை விடுதலை செய்தது ஹமாஸ்

பாங்காக்:

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். பலரை கொன்று குவித்ததுடன், சுமார் 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா முனையை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலகளை நடத்துகின்றனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த சில பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் இருந்து பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்த காலம் முடிவுக்கு வந்தபின், மீண்டும் போர் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் இன்று விடுதலை செய்தனர்.

இஸ்ரேலில் இருந்து குறைந்தது 32 தாய்லாந்து நாட்டவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை விடுவிப்பது தொடர்பாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் மற்றும் தாய்லாந்து முஸ்லிம் குழுக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாத இறுதியில் ஏற்கனவே 17 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிக்கப்பட்ட 6 பேர் இன்று நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 9 பேர் ஹமாஸ் பிடியில் உள்ளனர். அவர்களை விடுவிக்கவும் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தியபோது, சுமார் 30 ஆயிரம் தாய்லாந்து நாட்டவர்கள் தங்கயிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

சண்டையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 39 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். 8500க்கும் மேற்பட்ட மக்களை தாய்லாந்து அரசு வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.