Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால் குடைச்சல் வந்துவிடுகிறது. லேசான ஈரப்பதம் கூட ஒத்துக்கொள்வதில்லை. பெயின்கில்லர் போட்டால்தான் சரியாகிறது. இதற்கு என்ன காரணம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

மழை மற்றும் குளிர்காலங்களில் superficial blood vessels எனப்படும் மேலோட்டமான ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதனால் நம் சரும நிறம் கூட சற்று வெளிறி காணப்படும். அதாவது, கோடைக்காலத்தில் இருப்பதைப் போல குளிர்காலத்தில் நம் சரும நிறம் அவ்வளவு கறுப்பாக இருக்காததற்கும் இதுதான் காரணம். குளிர்காலத்தில் கதகதப்பான உடைகளை அணியாவிட்டால், குளிரானது, எலும்புகள் வரை பாயும்.
ரத்த ஓட்டம் குறைவதுதான் கை, கால்களில் ஏற்படும் வலி மற்றும் குடைச்சலுக்கு முக்கிய காரணம். தவிர, குளிர்காலத்தில் உடல் மந்தமாக, சோம்பேறித்தனதமாக இருக்கும். உடற்பயிற்சி செய்ய உடல் ஒத்துழைக்காது.
மழை மற்றும் குளிர்காலத்தில் உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்காமல், வீட்டுக்குள்ளேயேகூட செய்யலாம். இதன் மூலம் உடல் கதகதப்பாக இருக்கும். அது கை, கால் குடைச்சலை ஓரளவு குறைக்கும்.
அடுத்து குளிர் மற்றும் மழைக்காலத்தில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிடுவார்கள் பலரும். ஆனால் தசைகளின் இயக்கத்துக்கு தண்ணீர் மிக முக்கியம். உடலில் நீர்வறட்சி ஏற்படும் போது கை, கால்களில் வலி, தசைப்பிடிப்பு, குடைச்சல் போன்றவை வரும்.

உணவில் காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக, கை, கால் வலி, குடைச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.