பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக 13 அரசு அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் 13 அதிகாரிகளின் வீடு, அலுவலகம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என 63 இடங்களில் சோதனை நடத்தினர்.
கர்நாடக பாஜகவின் மாநிலத் தலைவர் விஜயேந்திராவின் மைத்துனரும் யாதகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியுமான பிரபுலிங்மங்கருக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலிருந்து ரூ. 16 லட்சம் ரொக்கம், ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்க, வைர மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் மின்வாரிய பொறியாளர் சென்னகேசவாவின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 92.95 லட்சம் ரொக்கப்பணமும், ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்களும் சிக்கின. இதுதவிர 4 விலை உயர்ந்த கார், பைக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து லோக் ஆயுக்தா காவல் ஐஜி சுப்ரமணியேஸ்வரா ராவ் கூறுகையில், ‘‘63 இடங்களில் நடத்திய சோதனையில் பணம், நகைகள், சொத்துகளின் ஆவணங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன”என்றார்.